ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டம் – சீமான் அறிக்கை

கிராம ஊராட்சிச் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதுமுள்ள 12,525 கிராம ஊராட்சிகளின் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை வெளியிடாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஊராட்சி செயலாளர்களைத் தங்கள் விருப்பம்போல பந்தாடும் அநீதிக்கு திமுக அரசு துணைபோவது நிர்வாக சீர்கெட்டின் உச்சமாகும்.

அரசு செயல்படுத்த நினைக்கும் திட்டங்களை, கடைக்கோடி கிராமப்புற குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கின்ற உற்ற துணையாகவும், அரசுக்கும் பாமர மக்களுக்கும் இடையே உறவுப்பாலமாகவும் திகழ்கின்ற மக்கள் சேவகர்கள்தான் ஊராட்சிச் செயலாளர்கள். அரசின் பல்வேறு திட்டங்களை முறையாக ஒழுங்குபடுத்தி, திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும் ஊராட்சி செயலர்கள்தான் இருக்கிறார்கள்.

கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் அளவிற்குமேல் வரவு-செலவு நிதியினைக் கையாளும் ஊராட்சிச் செயலாளர்களின் பணியானது இதுவரை நிரந்தரம் செய்யப்படாததும், அவர்களுக்கான ஊதியம் முறைப்படுத்தப்படாததும் பெருங்கொடுமையாகும்.

தமிழ்நாடு அரசால் கடந்த 1996 ஆம் ஆண்டு ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தொகுப்பூதிய அடிப்படையில் ஊராட்சி எழுத்தர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, பின் ஊராட்சி செயலாளர்கள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஊராட்சி செயலாளர்களை அந்தந்த கிராம ஊராட்சித் தலைவர்களே நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்த காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலின் மூலம் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் புதிய ஊராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும்போதும் ஏற்கனவே பணியிலிருந்த ஊராட்சி செயலாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, தங்களுக்கு வேண்டியவர்களை புதிதாக பணியமர்த்தும் போக்கு அதிகரித்தது. இதனால் ஊராட்சி செயலாளர்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறி ஆனதுடன், ஊராட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறவும் வழிவகுத்தது.

Also Read  பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்

இதனை முறைப்படுத்தும் விதமாக முந்தைய அதிமுக அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு ஊராட்சி செயலாளர்களை அரசு உயர் அதிகாரிகளே நியமிப்பார்கள் என்று உத்தரவு பிறப்பித்ததுடன், 2018ஆம் ஆண்டு காலமுறை அடிப்படையில் ஊதியம் வழங்கவும் முடிவெடுத்தது. ஆனால், ஊராட்சி செயலாளர்களை அரசு அதிகாரிகளே நியமிப்பார்கள் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக ஊராட்சிமன்றத் தலைவர்கள் வழக்குத்தொடர்ந்து நீதிமன்றத்தில் தடையாணைப் பெற்றனர்.

இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக, ஊராட்சிச் செயலாளர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்ய வேண்டுமெனக்கோரி நீண்டகாலமாக ஊராட்சிச் செயலாளர்கள் போராடி வருகின்றனர். ஊராட்சிச் செயலாளர்களின் நியாயமான அக்கோரிக்கை குறித்துப் பரிசீலிப்பதாக கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவித்த திமுக அரசு, இன்றுவரை அதனை நிறைவேற்றாமல் காலங்கடத்தி வருவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு திமுக அரசும் துணைபோகிறதோ என்ற ஐயமும் எழுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த 25 ஆண்டு காலமாக ஊராட்சிச்செயலாளர்கள் சந்தித்துவரும் பணி பாதுகாப்பின்மை மற்றும் ஊதிய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக, கிராம ஊராட்சிச் செயலாளர்களை இனி அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து அரசே நியமிக்க வகைசெய்யும் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Also Read  மே 15 முதல் தொடர் போராட்டம் - சிக்கலில் ஊரக உள்ளாட்சி துறை