குலதெய்வம்
மனித வாழ்வை முறைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை உணரவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான், இறை நம்பிக்கையும், வழிபாடும்.குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!
அந்த பிரபஞ்ச சக்தியை, உண்மை என்று அனைவருக்கும் உணர்த்துவது சூரிய- சந்திரர் இயக்கமே. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
உலகம் முழுவதும் நவக்கிரகங்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பது நிதர்சனமான உண்மை.
உளவியல் ரீதியாக ஒரு ஆன்மா, பூமியில் தன் வினைப் பயனை கூட்டவோ, குறைக்கவோ தன் பயணத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறது.
நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் தன் வினைப் பயனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை உணரும் ஆன்மா, பாக்கிய பலனை அதிகரித்து முக்திக்கு வழி தேடும்.
அவ்வாறு பாக்கிய பலனை அதிகரிக்க, ஒருவரது 5-ம் பாவம் தொடர்பான வழிபாடு நல்ல பலன் தரும்.
இங்கே 5-ம் பாவம் என்பது, 5-ம் பாவத்தின்
5-ம் பாவமான 9-ம் பாவம் ஆகும். 9-ம் பாவம் என்பது தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களை குறிப்பதாகும்.
குலத்தை காக்கவும் தனது வாரிசுகளின் நலனை காக்கவும் முக்தியடைந்த ஆன்மாக்களே குல தெய்வமாக இருந்து ஆசி வழங்குகிறார்கள்.
தெய்வங்களில் மிகவும் வலிமையானது குல தெய்வமே. அது மற்ற தெய்வங்களின் வழிபாட்டு பலன்களையும் பெற்றுத் தரும் ஆற்றல் மிக்கது.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே இருக்கும். ஆனால் அளவற்ற சக்தியுடையது. இவ்வளவு மகிமை வாய்ந்த குல தெய்வம், பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம்.
தெரிந்தவர்கள் பலரும் அதனை முறையாக விரதம் இருந்து வழிபாடு செய்யாமல் இருக்கலாம். அப்படி தெரிந்தும் வழிபடாமல் இருப்பதால் ‘குலதெய்வ குற்றம்’ ஏற்படும்.
ஒரு ஜாதகத்தின் 5-ம் பாவத்திற்கான அதிபதி மற்றும் 5-ம் பாவம் குல தெய்வ அருளை காட்டும். ஐந்தாம் பாவத்தை பார்க்கும் அல்லது
ஐந்தாம் பாவ அதிபதியுடன் சேரும் கிரகத்தின் தன்மையைக் கொண்டு, ஒருவரது குல தெய்வ அனுக்கிரகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அறியலாம்.
ஒரு ஜாதகத்தில் குரு அல்லது 1, 5, 9 ஆகிய இடங்கள் வலிமையாக இருந்தால், அந்த நபரின் குரலுக்கு குல தெய்வம் முன் வந்து நிற்கும்.
*1, 5, 9 ஆகிய இடங்களுக்கான அதிபதி அல்லது குரு 5-ம் பாவத்துடன் சம்பந்தம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு குலதெய்வத்தின் அருள் நிச்சயம் உண்டு.
5-ம் பாவ அதிபதியின் மீது, சனி, செவ்வாய், ராகு-கேது பார்வை விழுந்தால், குல தெய்வ வழிபாட்டை தடை செய்யும்.
5-ம் பாவ அதிபதி நீச்சம் அல்லது அஸ்தமனம் அடைந் திருந்தால், அவர்களுக்கு குலதெய்வம் இருந்தும், அதனை வழிபாடு செய்வதில் ஆர்வம் இருக்காது.
5-ம் பாவ அதிபதி 8-ல் மறைந்திருந்தால், குல தெய்வ குற்றம், சாபம் இருக்கிறது என்று பொருள். குலதெய்வ குற்றம், சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
அவற்றை சரி செய்ய கோவிலை சரியாக பராமரித்து, முறையான அபிஷேக ஆராதனை செய்து, வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, உணவு படைக்க வேண்டும்.
அத்துடன் கோவிலுக்கு வருடம் ஒரு முறையாவது சென்று வழிபட்டு, தான தர்மம் செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குலதெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் பாதுகாக்க வேண்டும்.
ஒருவருக்கு தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதும் கூட, ஒரு வகையில் குலதெய்வ சாபம் தான்.
குலதெய்வ சாபம் உள்ளவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் ஜோதிட ரீதியாக 5-ம் பாவ அதிபதி தொடர்பான தெய்வத்தை கண்டறிந்து,
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால், குலதெய்வம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.
பெண்கள் அனைவரும் தங்களின் திருமணம் முடிந்த பிறகு, பிறந்த விட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டு குலதெய்வத்தையும் வணங்கி வந்தால் பலன்கள் இரட்டிப்பாகும்.
பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.
விநாயகர், முருகன், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற தெய்வங்கள், ஒருவருக்கு இஷ்ட தெய்வமாக இருக்க முடியுமே தவிர, குல தெய்வமாக இருக்கும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை.
குல தெய்வங்கள் கர்ம வினைகளை நீக்க வல்லவை. தென் தமிழ்நாட்டில் சில சமூகத்தினர், குல தெய்வம் தெரியாதவர்களின் வீட்டில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை.