ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டனர்..

தற்பொழுது குடிநீர் வசதி,கழிப்பறை, வசதி,மின் வசதி, தளவாடங்கள் வசதி சாமியானா அமைத்தல்,சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், உணவு செலவுகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஊராட்சி செயலர்களே மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்..
வாக்குச்சாவடிகளுக்கான ஏற்பாடு செலவுகளை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விடுவித்துவிட்டு, பணிகளை மட்டும் ஊராட்சி செயலர்கள் செய்ய வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுப்போம் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழியே அதிகார பலத்தை காட்டுவது சரியானதாக இல்லை!

ஊராட்சி செயலர் என்பவர் கிராம ஊராட்சியின் நிர்வாக அதிகாரி அல்ல..பஞ்சாயத்து நிர்வாக அலுவலரின் உதவியாளர் மட்டுமே!..ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கடிதம் ஏதும் வழங்காமல் வெறுமனே ஊராட்சி செயலரை மிரட்டி வேலை வாங்கும் போக்கு சரியானதாக இல்லை..இது எப்படி இருக்கிறது என்றால் பணத்தை ஒருவரிடமும் அதிகாரத்தை ஒருவரிடமும் கொடுத்துவிட்டு வெறுங்கையாக உள்ள ஒருவரை பார்த்து நீ உலகத்தை சுற்றிவர வேண்டும் இல்லை எனில் தண்டித்து விடுவேன் என்பது போல் உள்ளது

Also Read  உச்சகட்ட வெயில் - ஊராட்சி செயலாளர்களின் தொடரும் இரண்டாம் நாள் போராட்ட படங்கள்

எந்த மாவட்ட தேர்தல் அதிகாரியாவது வருவாய் துறை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்களை இந்த பணிகளை ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார்களா?

அதுவும் இல்லை

அல்லது..

ஊராட்சி செயலர்கள்தான் அனைத்து பணிகளையும் செய்கிறார்கள் என மேன்மை தங்கிய தேர்தல் ஆணையத்திடம் சொல்லி தேர்தல் சிறப்பு ஊதியம் பெறுவதற்கு பரிந்துரைக்கிறார்களா?

அதுவும் இல்லை

எத்தனை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வருவாய் துறைக்கு நெருக்கடி கொடுத்தனர்?

அதே நேரம்

ஊரக வளர்ச்சித் துறைக்கு நெருக்கடி கொடுக்காத மாவட்ட தேர்தல் அதிகாரி யாராவது உண்டா?

வாய்மொழி உத்தரவுகள் எழுதப்படாத தலைவிதியாக உள்ளன..

பணியிடத்தை பாதுகாக்க கடன் வாங்கி அடிப்படை வசதிகளை செய்யும் ஊராட்சி செயலர் கடன் வாங்கும் பணத்திற்கு யார் பொறுப்பு?

இதற்கு தீர்வாக

மாநில மையம் பல்லாண்டுகாலமாக கேட்டு வருவதைப்போல ஊராட்சி செயலர்களுக்கு தேர்தல் சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும்..

வாய்மொழி உத்தரவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்..

ஊராட்சி செயலர்கள் மேற்கொள்ள உள்ள செலவினத்திற்கு முன்பணமாக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து தொகை வழங்கப்பட வேண்டும்..

வருங்காலங்களில் ஊராட்சி செயலர்கள் உழைப்பை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு போது ஊராட்சி செயலர்கள் பதவி விடுபடாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்

Also Read  உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திப்பு

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்