தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?

தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(கோப்ஸ்-கூட்டமைப்பு) எதிர்வருகின்ற 02.02.2024 ம் தேதி 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பனகல்மாளிகை முன்பாக ஒரு பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறிவிப்பு செய்துள்ளது.இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் எனில் இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் என்பவர்.

இவர் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார்.இவர் தலைமையிலான சங்கத்தில் 8000 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் உள்ளனர்.இந்த செயலர்கள் ஒவ்வொருவரும் தலா 5 பேரை அழைத்து வந்தாலே சுமார் 50000 பேர் பனகல் மாளிகை வந்துவிடுவார்கள்.மக்களவை தேர்தல் ஆரம்பிக்க உள்ள நிலையில் இப்போராட்டம் மிகப்பெரிய தலைவலியை அரசிற்கு உருவாக்குவது நமது புலனாய்வு பார்வையில் தெரிகிறது.

ஏற்கனவே கடந்த மே மாதம் 110 டிகிரி வெயிலில் 04 நாள் இதே சென்னை சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளது இந்த சங்கம்.இவர்களுடன் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர், தூய்மை காவலர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் என்பவரும் கை கோர்த்துள்ளதால் ஊரகவளர்ச்சித்துறையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.குடிநீர் விநியோகம்,சுகாதாரம்,வரிவசூல் கேள்விக்குறியாகிறது.

இந்த கூட்டமைப்பு வைத்துள்ள கோரிக்கைகளாவன..

*1-40 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்கள் மாத தொகுப்பு ஊதியமாக ரூபாய் 4000 பெற்று வருகின்றனர்..இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் நிர்ணயித்து காலமுறை ஊதியத்தில் ஈர்த்துக் கொள்ள வேண்டும்*

*2-கிராம ஊராட்சியில் ரூபாய் 250 மாத ஊதியத்தில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்*

Also Read  பஞ்சாயத்து தலைவர்-பதவி நீக்கம்

*3-கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்களுக்கு பணிக்கொடை ரூபாய் ஒரு லட்சம் ஓய்வூதியம் ரூபாய் 5000 கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும்*

*4- ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ 10000 வழங்கிட வேண்டும்*

*5- ஊராட்சி செயலர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நிலை/சிறப்பு நிலை/தேக்கநிலை ஊதியம் வழங்கிட வேண்டும்*

*6-ஊராட்சி செயலர்களுக்கு தமிழக அரசு பணியாளர்களுக்கு பொருந்தும் விடுப்பு விதிகள் அனுமதிப்பதுடன் அரசு பணியாளர்களுக்கு உள்ளதனை போன்று பென்ஷன் திட்டத்திலும் இணைத்திட வேண்டும்*

*7- தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும்*

*8- தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூபாய் 10000 வழங்கிட வேண்டும்*

*9- தூய்மை பணியாளர்களுக்கு 2013 ஆம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டதில் விடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலம் வரை ஊதியத்தில் ஈர்த்து அரசாணை வெளியிட வேண்டும்*

*10- மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதை போன்று கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்*

*11- VPRC கணக்கர்கள்/தூய்மை பாரதத்திட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 10000 ஊராட்சி மூலம் வழங்கிட வேண்டும்*

*12- ஊராட்சி செயலர்களுக்கு வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்குவதை போன்று மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கவுன்சிலிங் முறையில் வட்டாரத்திற்குள் பணி மாறுதல் வழங்கிட வேண்டும்*

Also Read  புஞ்சைகாளக்குறிச்சி ஊராட்சி - கரூர் மாவட்டம்

*13- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள்-தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்*

*14- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்*

*15- கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூபாய் 15,000 இதுவரை வழங்கவில்லை அத்தொகையை உடனே வழங்கிட வேண்டும்*

*16- ஊராட்சி செயலர்களுக்கான கூடுதல் பொறுப்புப்படி ரூபாய் 500 மட்டுமே வழங்கப்படுகிறது.. இதனை மாற்றி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்குவதை போன்று அடிப்படை உதியத்தில் பகுதி அளவு வழங்கிய கேட்டல்*

*17- தமிழகத்தில் காலியாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டல்*

*18-தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை TNPSC மூலம் நிரப்பிட கேட்டல்*

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளனர்.

மேற்கண்ட ஊராட்சி பணியாளர்களின் நியாயமான கோரிகைக்களை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதுதான் ஆளும் கட்சிக்கு நல்லது.

பொன்னையா இஆப அவர்கள் இந்த துறையின் உள்ளும் புறமும் தெரிந்தவர். தான் பணியாற்றிய துறைகளில் பல அதிரடிகளை அரங்கேற்றியவர். இந்த பணியாளர் நலன் சார்ந்த பிரச்சனைக்கு நல்ல முடிவை எடுப்பார் என நம்பலாம்.