உள்ளாட்சி கட்டமைப்பு எப்படி?

ஒரு அலசல்

ஊரகம் , ஊராட்சி என்றால் என்ன .

அவற்றின் கடமைகள் பற்றிய விளக்கங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4 கோடிக்கும் அதிகமாக ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் போன்றவற்றை முனைப்புடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

மேலும், பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், அவற்றில் குடிநீர் வசதி, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய முக்கிய பணிகளையும் இத்துறை செயல்படுத்தி வருகிறது.

ஊரக சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் மற்றும் பராமரித்தல், பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடங்களை அமைத்தல் மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பினை உறுதிசெய்து அவர்கள் அரசு நிர்ணயித்த ஊதியத்தினை பெற்றிட வழிவகை செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் கிராம மக்களின் வறுமை ஒழிப்பு, கிராமப்புற மகளிர் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல் போன்றவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தி வருகின்றது.

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகள் :

73வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 1993-ல் கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் இயற்றப்பட்டது.

இதன்படி, ஊரகப் பகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை அதாவது, அடித்தள அமைப்பாக கிராம ஊராட்சி, இடைநிலையில் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஊரக வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நோக்கம் :

அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், ஊரக துப்புரவுப் பணிகள், சாலைகள், வடிகால் வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை கிராம ஊராட்சியின் முக்கிய பொறுப்பாகும்.

Also Read  ஏப்ரல் 24 - பஞ்சாயத்துராஜ் தினத்தில் பிரதமர் உரை

அனைத்து தனிநபர் பயன்பெறும் திட்டங்களில் பயனாளிகள் கிராம ஊராட்சிகள் மூலமே கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கு கிராம சபை ஒப்புதல் அளிக்கிறது. இடைநிலை ஊராட்சியான வட்டார ஊராட்சி வலுவான நிர்வாக அமைப்பும், தொழில்நுட்ப பிரிவும் கொண்டுள்ளதால் ஊரக வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் கிராம ஊராட்சியுடன் இணைந்து பங்காற்றுகிறது.

திட்ட ஒருங்கிணைப்பு, ஆய்வு மேற்கொள்ளுதல் ஆலோசனை வழங்குதல் மற்றும் கண்காணிக்கும் அமைப்பாக மாவட்ட ஊராட்சி திகழ்கிறது.

மூன்று அடுக்கு ஊராட்சி அமைப்புகள் தங்களின் சட்டப்படியான விருப்பக் கடமைகள் மற்றும் ஆய்வு செய்யும் கடமைகளோடு ஒப்படைக்கப்பட்ட பிற பணிகளையும் செய்து வருகின்றன.

மாநில அளவில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நிர்வாகத்தை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் செயல்படுத்துகிறார்.

மத்திய, மாநில அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் செயலாக்கத்தை முறைப்படுத்தி கண்காணித்தல் ஆகியவையவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில் தலைமைப் பொறியாளர் அதிகாரம் கொண்ட ஒரு கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் செயல்படும் தொழில்நுட்ப பிரிவு, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு உதவி புரிந்து வருகிறது. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாவார்.

கிராமப்புற ஏழை மக்களை ஆற்றல்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் திட்ட இயக்குநர், புது வாழ்வு திட்டம் தலைமையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், வாழ்வாதாரத் திட்டங்களை செயல்படுத்தவும் திட்ட இயக்குநர் தலைமையில் ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.

Also Read  அரியூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

மாவட்ட அளவில் :

மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் ஆய்வாளராக செயல்படுகிறார்.

மாவட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாவட்ட ஆட்சியரே தலைவராவார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர், திட்டப் பணிகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கு உதவிபுரிகிறார். ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலும், நிர்வாக பொறியாளர் தலைமையில் ஒரு பொறியியல் பிரிவு இயங்கி வருகிறது. உதவி இயக்குநர் நிலையிலான ஒரு செயலாளர், மாவட்ட ஊராட்சியில் பணிபுரிகிறார்

. அத்துடன், இவர் பதவிவழி மாவட்ட திட்டக் குழுவின் செயலாளராகவும் உள்ளார்.

மேலும், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி நிர்வாகத்தில் உதவி புரிகின்றனர்.

வட்டார அளவில் :

வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) என இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆவார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்.

ஒவ்வொரு வட்டார ஊராட்சியிலும் ஒன்றியப் பொறியாளர் / உதவிப் பொறியாளர், பணிமேற்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் ஆகியோர் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இப்பொறியாளர்களின் செயல்பாடுகள் உட்கோட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்களால் கண்காணிக்கப்படுகிறது.

கிராம ஊராட்சி அளவில்

கிராம ஊராட்சித் தலைவரே கிராம ஊராட்சியின் செயல் அலுவலரும் ஆவார். தலைவர் மற்றும் துணைத்தலைவர் அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளரால் (மாவட்ட ஆட்சித் தலைவர்) நியமிக்கப்படும் கிராம ஊராட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கிராம ஊராட்சி கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான காசோலைகளில் ஒப்பம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சித் தலைவருக்கு கிராம ஊராட்சி செயலாளர் நிர்வாகத்தில் உதவி புரிகிறார்.