பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்

ஜான்போஸ்கோ பிரகாஷ்

பணிமாறுதலை ரத்து செய்யவேண்டும்

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனம் சிவகங்கை ஒன்றியத்தின் பக்கம் திரும்ப வேண்டும்

சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ஆக பணியாற்றிவரும் திரு.பாஸ்கரன் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலரின் தூண்டுகோல் காரணமாக சில லட்சங்கள் பெற்றுக்கொண்டு 5 ஊராட்சி செயலர்களுக்கு பணியிட மாறுதலை விதிமுறைகளை மீறி வழங்கியுள்ளார்.

ஒரு ஊராட்சி செயலரை பணியிட மாறுதல் செய்யும் நேர்வில் அவர் பணியாற்றிவரும் ஊராட்சி தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும்,குற்றச்சாட்டுகள் ஏதும் இன்றி பணியிட மாறுதல் செய்யக்கூடாது என்றும் அரசாணை எண் 72 தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இவ்விதிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு,பணம் ஒன்றே குறிக்கோளாக கணக்கில் எடுத்து பேரிடர் காலத்தில் தேவையற்ற இப்பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது தவறான நடவடிக்கை என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மூலம் நேரிடையாகவும்,தொலைபேசியிலும் சுட்டிக்காட்டினாலும் தனது தவறை மாற்றிக்கொள்ள மறுக்கிறார்.

இது குறித்து உயர் அலுவலர் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட பிறகும் இந்நிலை தொடர்கிறது.

ஊராட்சி செயலர் அனைவரும் பேரிடர் காலத்தில் களப்பணிகளை தீவிரமுடன் செய்துவரும் இவ்வேளையில்,அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பணியிட மாறுதல் வழங்கியுள்ளது கேலிக்கூத்தானது.

இதே நபர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவியான ஈப்பு டிரைவரை தனது சுகபோக வாழ்க்கைக்காக விடுப்பு நாளில் மிரட்டி அழைத்து சென்று விபத்தில் சிக்க வைத்து மரணத்தை ஏற்படுத்தியவர்.

Also Read  செயல்வீரர்களின் கரங்களை வலிமைப்படுத்துவோம்... தலைவர்களை பாராட்டும் தருமபுரி க.கிருஷ்ணன்

தண்டனைக்குள்ளான இவர் தனக்கு ஏற்பட்ட பண தாகத்தால் மோசமான முன்னுதாரனங்களை ஏற்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் கணக்கில் எடுப்பதுடன்,பேரிடர் காலத்தில் அவசியமற்ற,விதிமுறை மீறலான,அனுமதி பெறாத பணியிட மாறுதல் வழங்கிய சம்மந்தப்பட்ட வ.வ.அ(கி.ஊ) பாஸ்கரன் என்பவரை பணியிடை நீக்கம் செய்திட வேண்டும்.

மேலும்…

மேற்கண்ட அலுவலர் பிறப்பித்த உத்தரவை உடன் ரத்து செய்து பேரிடர் கால பணிகளை ஊராட்சி செயலர்கள் தொடர்ந்து செய்திட வழிவகை செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தமிழ்நாடு உள்ளாட்சி செயலர்கள் சங்கத்தின் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தெரிவித்துள்ளார்.