கூடலூர் கோட்டத்தில் வன குற்றங்களை தடுக்க நடவடிக்கை

கூடலூர்

கூடலூர் கோட்டத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடிகளில் வன குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன.

இங்கு வன குற்றங்களை தடுக்கும் வகையில் வன அலுவலர் தலைமையில் வனச்சரகர்கள் உள்பட வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர பறக்கும் படையினரும் பணியாற்றுகின்றனர்.

இதற்கிடையில் கூடலூர் வன கோட்டத்தில் மட்டும் 8 இடங்களில் வனத்துறை சோதனைச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

இதனால் வன குற்றங்களை தடுக்கும் பணியில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகிறது.

இந்த  வன கோட்டத்தில் உள்ள அனைத்து வனத்துறை சோதனைச்சாவடிகளிலும் வன குற்றங்களை தடுக்கும் வகையில் மொத்தம் 42 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வன குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், அவர்கள் தப்பி செல்லும் வாகனங்களை கண்டறிவதில் சிரமங்கள் இருந்து வந்தது. இதற்கு வசதியாக அனைத்து வனத்துறை சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இதன் மூலம் உயர் அதிகாரிகளும் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியும். மேலும் வன ஊழியர்களும் விழிப்புடன் பணியாற்றுவார்கள்.

Also Read  மலிவு விலை மருந்தகமும்- நடைமுறை சிக்கல்களும்

வன குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் உதவியாக இருக்கும். இதற்கு ரூ.5 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வன கோட்ட அலுவலகம் செயல்படும்  ஈட்மூலா பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. தேவைப்பட்டால் வனப்பகுதிக்குள்ளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.