சென்னையில் இருந்து கோத்தகிரி அருகே உள்ள அளியூருக்கு வந்தவர்களை திரும்ப அனுப்பக்கோரி கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை சேர்ந்த 6 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், டிரைவர்கள் 2 பேர் என மொத்தம் 10 பேர் இ-பாஸ் பெற்று
நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அளியூர் கிராமத்துக்கு வந்தனர்.
அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் தங்கினார்கள். முன்னதாக குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 10 பேரை பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர்,
அவர்கள் அனைவரும் தங்கும் இடங்களிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் நடைபயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தனியார் தங்கும் விடுதி முன்பு திரண்டு சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 10 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, மீண்டும் அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால், வெளியூர் நபர்களை கிராமத்தில் தங்க வைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் அவர்கள் 10 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்யாவிட்டால், அனைவரும் தங்களது சொந்த ஊருக்கே திரும்பி செல்ல வேண்டும், இல்லையென்றால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
உடனே அவர்கள் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முன்வந்தனர். அங்கு 10 பேரிடம் இருந்து சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் தங்கி உள்ள விடுதி முன்பு தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்பின்னர் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.