களத்தில் கலக்கும் கான்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கு.சரஸ்வதி .
50 வயதைக் கடந்த துப்பரவு பணியாளராக இருந்தவர்.
தற்போது அதே ஊராட்சி பொதுமக்களால் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் மக்களுக்கான சுகாதாரப் பணிகளில் தானே களத்தில் நின்று பணியாற்றி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
சுகாதாரப் பணி மட்டுமின்றி தெருவிளக்கு, குடிநீர் வசதி என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் மக்களின் நிலையறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது பணியாளர்களின் நலனிலும் முழு அக்கறை செலுத்தி வருகின்றார்.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் காலை டிபன், மதியம் சிக்கன் பிரியாணி, முட்டை, சாதம் , ரசம், பொறியல் என தினம் தினம் நல்ல உணவினை வழங்கி அவர்களோடு அமர்ந்து உணவருந்தி வருகிறார்.
பணியாளர்கள் அனைவரும் தன் குடும்பம் போல நினைப்பதாக பெருமையுடன் கூறி மகிழ்கிறார்.
தெருக்களில் இரும்பு பாலம், அலுவலக வளாகங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் என வித்தியாசமாக வியக்கத்தக்க வகையில் செயல்பட ஊராட்சி செயலர் கேபிஎஸ் கண்ணன் தனக்கு பக்கபலமாக இருந்து வருகின்றார் என மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றார்.
தான் ஒரு வயதான துப்பரவு தொழிலாளி என்று எண்ணுவோர் மத்தியில் தன்னலமில்லாது தளராமல் செயல்பட்டு வரும் தலைவியை நமது இணைய தளக்குழுவும் பாராட்டு தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.