சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் 06.09 2002 முதல் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் நான் எனது பணியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி அவர்களின் பொருளாதார நிலைகளில் உயரவைத்து எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையில் செயலாற்றிவருவதோடு மத்திய மாநில அரசு திட்டங்களைமக்களிடத்தில் கொண்டு செல்வதில் சிரத்துடன் பணியாற்றி வருகிறேன் .
அவ்வாறு எனது ஊராட்சி பணியில் நடப்பாண்டு வீட்டுவரி வசூல் 30.12.2024 100% முடித்துள்ளேன் என்பதை தங்களின் கனிவான. பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
அத்துடன் எனது ஊராட்சியில் சுமார் 85 ஏக்கரில் சோமம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 20 ஆண்டு காலமாக நீர் வரத்து ஏதும் இல்லாமல் வறண்டு சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்டு வந்தது .
இந்த சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்ததால் நிலத்தடி நீர்மட்டம் 1500 அடி என்ற நிலையில் சுற்றுவட்டாரம் முழுக்க நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டதால் குடிநீர் ஆதாரங்கள் வற்றிவிட்டதை உணர்ந்து இந்த சீமை கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் 2015 ஆம் ஆண்டு பெருமாள் கோவில் அருகில் தேக்கு மர தோட்டம் அமைத்து அதில் சாக்கடை கழிவு நீரை பயன்படுத்தி வளர்த்தோம் .
அதன் பின்பு தொடர்ச்சியாக பத்தாண்டு காலத்தில் 40 ஏக்கர் அளவுக்கு தேக்கு நீர்மருது நாவல்,தென்னை, யூக்லிபிடஸ் வேம்பு வாழை, வெள்ளை வேல்,பனை விதைகள், தாலிப்பனை மற்றும் அனைத்து விதமான மர வகைகளையும் வளர்த்து வருகிறோம்.
இந்த அடர்வன மரம் வளர்ப்பிற்கு வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து தன்னார்வ அமைப்புகளும் எங்களுக்கு உதவி புரிந்து வந்துள்ளனர் அதில் முக்கியமாக வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை மலர் மருத்துவமனை ராம்கோ சிமெண்ட்,சோமம்பட்டி சரவணா பிராய்லர்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு நன்கொடைகளை வழங்கி பொருளாதார ரீதியாகவும் உதவி செய்துவருவதால் இந்த நிலையை எட்ட முடிந்தது.
மேலும் வாழப்பாடி வனத்துறை பெருமளவில் எங்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியதனால் இன்று மிகப்பெரிய அடர்வனமாக இங்கே காட்சியளிக்கிறது. இவை அனைத்தையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக் கொண்டு பராமரித்து வருகிறோம் .
இந்த மரம் வளர்ப்புக்கு வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர்.
இந்த 10 ஆண்டு காலத்தில் சோமம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மிகுந்த ஒத்துழைப்போடு இப்பணிக்கு ஊராட்சி செயலாளராக என்னால் முடிந்தவரை இந்த நிலை எட்டி உள்ளேன் என்பதை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள, K.மகேஸ்வரன், ஊராட்சி செயலாளர்,சோமம்பட்டி ஊராட்சி.
இப்படி ஒரு செய்தி நமக்கு கிடைத்தது.இப்படிப்பட்ட ஊராட்சி செயலாளர்களை ஊக்கப்படுத்தினால் மட்டுமே, அவர் போல பிறரும் ஊராட்சியை உயர்த்திட முன்வருவர். கிராம வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி இயற்கையை காத்திட்ட இந்த ஊராட்சி செயலாளருக்கு நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக ராயல் சல்யூட். ஊராட்சி செயலாளரின் செயல்பாட்டிற்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஜனவரி 26ல் நடைபெறும் குடியரசு விழாவில் இவரை பாராட்டுவதே சிறந்ததாக அமையும்.