சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்களால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த மாநில அரசினுடைய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய மத்திய அரசு திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில அரசின் திட்டங்களான ஊரக குடியிருப்புத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களாகிய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் (NNT), சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், கிராம சாலைகள் திட்டங்கள், நபார்டு சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய மத்திய அரசு திட்டங்களாகிய பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டு சிறப்பான திட்ட செயல்பாட்டிற்கான வழிகாட்டி நெறிமுறைகளும், ஆலோசனைகளும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் குறித்தும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் 15-வது நிதிக் குழு மானியம், உத்தேசிக்கப்பட்டுள்ள 16-வது நிதிக் குழு மானியம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் திரு. பா. பொன்னையா., இ.ஆ.ப., ஆணையர் (பயிற்சி) முனைவர் ஆனந்தகுமார், இ.ஆ.ப., சமூக தணிக்கை இயக்குநர் திரு. கிளாட்ஸ்டோன் புஷபராஜ், இ.ஆ.ப., (ஓய்வு) மற்றும் துறையின் அனைத்து கூடுதல் இயக்குநர்கள், தலைமைப் பொறியாளர்கள், அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.























