நிலவேம்பு- இத்தனை நோய்களை தீர்க்கும் அருமருந்து

பாரம்பரிய மருந்து

நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும்.நிலவேம்பு….! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…..!

நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை கொண்டது. விதைகள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

நிலவேம்பு முழுவதும் மருத்துவப்பயன் கொண்டது. கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

இதனால் நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும், புத்தி தெளிவு உண்டாகும், மலமிளக்கும், தாதுக்களைப் பலப்படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் விட்டு, விட்டு வரும் காய்ச்சலைக் குறைக்கும், பசியை உண்டாக்கும்.

விட்டு, விட்டு வரும் காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாட்கள் சாப்பிட்டால் பலன் தெரியும்.

தொடர் காய்ச்சலை கட்டுப்படுத்த சுண்டைக்காய் அளவு நிலவேம்பு இலை பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

5 கிராம் அளவு நிலவேம்பு இலை தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும். அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து  சாப்பிட வேண்டும்.

அல்லது வேரில் இருந்து கசாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்தி பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

குளிக்கும்போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டு கடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

Also Read  இதை எல்லாம் சாப்பிடுங்க- ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.

நிலவேம்பு செடியை வளர்த்தால் அங்கு பாம்புகள் வருவதில்லை.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பசியைத் தூண்டும்:

பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன.

இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

குடற்புழு நீங்கும்

குடற்புழுக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

குடற்புழுக்கள் நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வரவேண்டும்.

உடல் வலுப்பெறும்:

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு கசாயம் குடித்து வந்தால் பலன் கிட்டும்.

மயக்கம் நீங்க:

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளை காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்கும்

பித்தம் பிசகினால் பிராணம் போகும் என்பது சித்தரின் வாக்கு. அதன்படி பித்தநீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும்.

இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்கும்:

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

Also Read  பூண்டு - உணவே மருந்து தினமும் அருந்து
குழந்தைகளுக்கு:

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

அஜீரணக்கோளாறு

நில வேம்பு (காய்ந்தது) 16 கிராம், வசம்புத் தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்.

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்

கர்ப்பப்பை கட்டிகள்:

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும்.

மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

எங்கு கிடைக்கும்?

நிலவேம்புப் பொடியில் நிலவேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிட்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற ஒன்பது விதமான மூலிகைகள் உள்ளன.

இவை அனைத்தும் திப்பியாக அரைக்கப்பட்டு ‘நிலவேம்புப் பொடி’யாகக் கிடைக்கிறது. நிலவேம்பு பொடி தமிழகத்தின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

சித்த மருத்துவ கடைகளில் விற்கப்படுகிறது.

கசாயம்:

நிலவேம்பு பொடி 10 கிராம், 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இது ஒரு நபருக்கான அளவு.

யாரெல்லாம் குடிக்கக்கூடாது?

7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது.

அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது.

முன்னெச்சரிக்கை – வீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.

காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடித்தால் நல்லது. எல்லா ஆலோசனைகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி செய்வது நல்லது.