21 நாள்
தூக்கம் தொலைத்த வாழ்க்கை..துன்பம் நிறைந்த வாழ்க்கை..
ஆன கஞ்சியில்லை..
சுற்றார் எவரும் இல்லை!
சொந்த பூமியிலேயே அனாதைகளாக….
பிணங்கள் மட்டுமல்ல..மக்களும்தான்
பல ஆண்டுகளாக..பார்த்தே பழக்கப்பட்டதே!
பதுங்குவதற்கோ பாய்வதற்கோ திராணியில்லை!!
படபடத்த மனம் எப்போதும்..
படுப்பதற்கோ இடமில்லை..
மருத்துவமனைகளில் அல்ல..
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கூட..
எந்நேரமும் கேட்கும் வானூர்தி சத்தம்..
அதை தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்…
பிள்ளைகளின் கதறலை கேட்கும் பெற்றோர் மனம் துடிக்கும் துடிப்பு?
இருப்பினும்…
மரண ஓலம் என்ன புதிதா?
கேட்டுக்கேட்டே காதுகள் மறத்துவிட்டன..
மனங்கள் இறுகிவிட்டன..
இழப்பு ஒன்றும் புதியதல்ல..அது பழகியே போய்விட்டது!
ரத்தமும் சதை பிளவும் புதிதா?
கண்ணெல்லாம் வெறுத்தே விட்டது!
காலமெல்லாம் கரைந்து இப்போது..
உரிமை இல்லாவிட்டாலும் உயிர் என்னவோ தப்பியுள்ளது!
கம்பி வேலிக்குள்..
இத்தனை துயர் கண்ட இலங்கை தமிழருக்கு..
கொரோனா என்ன பெரிதா?
அதே தொப்புள் கொடியான தமிழர் பெருங்குடிகளே!
கொரனாவை விரட்ட
21 நாள் வீட்டுக்குள் அடைபடுவது பெரிதா?
இங்கே..இப்போது..
குண்டுமழை பொழியவில்லை..
வானூர்திகள் வட்டமிடவில்லை..
தூக்கம் தொலையவில்லை..
தாய் தமிழகமே…சி ந்தித்துப்பார்!
21 நாட்கள் ஊர் அடங்கல்ல..!
உள்ளம் அடங்கு..வீட்டின் உள்ளே அடங்கு..
இல்லை எனில் உனக்கு காத்திருக்கு அறுவை அரங்கு…
விதையாக விதைக்கப்படலாம்..
ஆனால் விதைப்பண்ணையாக மாறிவிடாதே…
(இந்த கவிதை விதைக்கும் நம்பிக்கை கொண்டு ஊரடங்கு காலத்தை உளப்பூர்வமாக கழிப்போம். )
உள்ளாட்சி செயலர்கள் உறுதியோடு பயணப்பட்டு கொரொனா எனும் கொடும் அரக்கனை வென்றெடுப்போம்.
அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்