உரிமைக்காக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட்டம் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…பரபரப்பு செய்தியா?

ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சித்துறையில் திட்ட இயக்குநராக வனத்துறை அதிகாரிகளை (IFS) நியமனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

காட்டை காட்டிலும் நாட்டிலும் அதிக விலங்குகள் வாழ்கிறதோ ஒற்றரே…

சரியாக சொன்னீர் தலைவா..இப்படி ஒரு நியமனத்தை செய்ய முடிவெடுத்த அதகாரிக்கு முதுமலை காட்டிற்குள் சிலை ஒன்று வைத்து சிறப்பு செய்ய வேண்டும் தலைவா..

செய்திக்கு வாரும் ஒற்றரே…

ஊரக வளர்ச்சி துறையில் இயங்கிவரும் இரண்டு சங்கங்கள் இந்த நியமனத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த உயிர்நாடி பிரச்சனையை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து பெரும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்திட சிலர் முயன்று வருவதாக தகவல் தலைவா…

ஊரக வளர்ச்சித் துறை முடங்கும் நிலைக்கு செல்லுமா ஒற்றரே..

எனக்கென்னவோ அதனை நோக்கி செல்லும் என்றே தெரிகிறது தலைவா. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால், ஊரக வளர்ச்சித்துறை மிகப்பெரும் ஆபத்தை நோக்கி செல்லும். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு உரிமைக்கு போராடினால் தான் ஊரக வளர்ச்சித்துறை காப்பாற்றப்படும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஒற்றரை தேடும் சங்கத்தினர் - ஒற்றர் ஓலை