பணி இடமாற்றம்
ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஒரே ஒன்றியத்திற்குள் இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக மாறி, ஊராட்சி செயலாளர்களுக்கு பணி மாறுதல் செய்வதாக மிக காட்டமான அறிக்கை ஒன்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைமை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, ஊராட்சி செயலாளர்களுக்கு தொடர்ந்து பணிச்சுமை அதிகரித்து வருகிறது என்ற உண்மையும் எங்களுக்கு தெரியும். அவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பெரும்பான்மையான இடங்களில் ஒத்துப்போவதில்லை.
ஊராட்சி தலைவர் என்பவர் ஏதாவது ஒரு கட்சி சார்ந்து பயணிப்பவராக இருப்பார். குறிப்பாக, ஆளும்கட்சியை சார்ந்தவராக இருந்தால், மாவட்ட அமைச்சர் அல்லது மாவட்ட செயலாளர் வழியாக எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
எங்களால் அவர்களை மீறி செயல்பட முடிவதில்லை.அதுபோல, சில ஊராட்சி செயலாளர்களின் செயல்பாடுகளும் மிக மோசமாக உள்ளது. அவர்களின் சங்கத்தில் இருந்து வந்துள்ள அறிக்கையை நானும் படித்தேன். மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளது வருத்தமாகத்தான் உள்ளது என்றார்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சொன்ன குற்றச்சாட்டிலும், நம்மிடம் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதிலும் ஒற்றை சொல் பொதுவாக உள்ளது. அது அரசியல்வாதிகளின் அதிகார திமிர்.
ஆக….அதிகாரம் அரசியல்வாதிகளிடமே. ஆனால், பாதிக்கப் படுவது அதிகாரிகளும், ஊழியர்களும் மட்டுமே.