மாநகராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி பணியிடம் வழங்க வேண்டும் மதுரை பொதுக்குழுவில் ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தில் கோரிக்கை
மேலூர் நவ 11
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தில் நேற்று 10ந் தேதி நடைபெற்றது.
மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் தா.முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.
மதுரை மாவட்ட தலைவர் சு.முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார்.
மாநில பொருளாளர் சி. செல்லபாண்டி நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
தமிழகத்தில் துணை முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊரக வளர்ச்சி துறையில் தணிக்கை தடையின் காரணமாக ஒய்வு பெற முடியாத நிலையில் இருந்த ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி பணிஓய்வு பெற வழிவகுத்த துறை செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி துறைஇயக்குநர் அவர்களுக்கும் பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும்,
ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், முழு சுகாதார திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் புதிய பணியிடம் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 12525 ஊராட்சிகளில் பணிபுரியக்கூடிய செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவதுடன் பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தின் கீழ் அவர்களை இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்களுக்கு பதிவறை எழுத்தர் பதவி உயர்வு வழங்குவதற்கான காலக்கெடுவினை 3 ஆண்டுகளாக குறைத்து உத்தரவு வழங்க வேண்டும் என்றும்,
உதவி இயக்குநர் நிலையில் பல்வேறு பணியிடங்கள் இருந்தாலும் வருவாய் துறையில் இருந்து உதவி இயக்குநர் நிலையில் வருபவர்களுக்கு மாநகராட்சி துணை ஆணையர் பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் நிலையில் வருபவர்களுக்கு மாநகராட்சி பணியிடம் வழங்கப்படவேண்டும் என்றும்,
வருவாய்த் துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரவேற்பு பணிகளுக்கு தனி வட்டாட்சியர் பணியிடம் உள்ளது.
ஆனால் ஊரக வளர்ச்சித் துறையில் மற்ற பணிகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவேற்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் வரவேற்பு பணியிடங்கள் புதிதாக அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க இயலாத சூழலில் சுற்றுலா தளங்கள் உள்ள மாவட்டங்களில் உருவாக்க பட வேண்டும் என்றும்,
ஊரக வளர்ச்சித் துறையில் தென் மாவட்டங்களில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக உள்ள சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகளை தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான புதிய பணியிடம் உருவாக்கப்பட தமிழக அரசு கேட்டுக் கொண்டனர்.
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி அரசு செயலாளர் அவர்கள் அங்கீகாரம் பெற்ற சங்கங்களை கால முறையில் அழைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக முதல்வர் அவர்களுக்கும், அரசு செயலர் அவர்களுக்கும், நமது சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. மாவட்டம் தோறும் 3 மாதங்களுக்கு ஒரு முறை பதிவு பெற்ற சங்கங்களை அழைத்து மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் பணியாளர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில செயலாளர் ச.கண்ணன் நன்றியுரை கூறினார்.