நாமக்கல் மாவட்டத்தில் ஆளும்கட்சியினர் போட்ட உத்தரவு -ஒற்றர் ஓலை

தலைவா…மற்ற மாவட்டங்களை விட நாமக்கல்லில் ஆளும்கட்சியினரின் ஆட்டம் அதிகம்.

என்ன சொல்றீங்க ஒற்றரே…

தனி அலுவலர் கட்டுப்பாட்டில் 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகள் சென்ற பிறகு, ஆளும்கட்சியினரின் தலையீடு அநேக  மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் அதிகார வர்க்கத்தினர் ஓன்றிய அளவில் கூட்டம் போட்டு சட்டம் போடுகின்றனர்.

ஒன்றியவாரியாக கூட்டமா?

ஆமா தலைவா…அந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் வரை கலந்துகொண்டனர். ஊராட்சிகளில் முக்கியமான ஆளுங்கட்சி நபர்களும், மாவட்ட புள்ளிகளும் கலந்து கொண்டனர். ஆளும்கட்சியினரின் கண் அசைவில் மட்டுமே ஊராட்சிகள் இயங்க உத்தரவு போட்டார்களாம்.

மேற்கு மண்டலத்தில் எல்லாம் இந்த நிலைதானா ஒற்றரே…

இல்லை தலைவா…எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள மற்ற பகுதிகளில் ஆளும் கட்சியினர் அடக்கி வாசிக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஊராட்சிகளில் ஆளும் கட்சியினரின் அளவற்ற தலையீடு என்பது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தும் தானே ஒற்றரே..

ஆமாம் தலைவா…தலைமை தக்க முடிவெடுத்து தங்கள் கட்சியினரை அடக்கி வைப்பது நல்லது என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  தனி அலுவலர் காலம் - பத்திரிகைகளே மக்களுக்கு கேடயம்