என்ன ஒற்றரே…முக்கிய செய்தியா?
ஆமாம் தலைவா…முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கையாக பணியிடைநீக்கத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் வந்து கொண்டே இருக்கிறது. போராடும் எந்த துறை ஊழியர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை இதுவரை இல்லை என்கின்றனர்.
கடைநிலை ஊழியர் மீது கடும் நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது தானே ஒற்றரே…
ஆமாம் தலைவா..அதே நேரத்தில் சங்கத்தின் நடவடிக்கை மீது அதிருப்தியும் நிலவுகிறது. தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் துறை அதிகாரிகள் செயல்படுவதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததை அதே சங்கத்தை சேர்ந்தவர்களும் ஏற்கவில்லை.
சரிதானே ஒற்றரே…முதல்வர் ஆணையிட்டால் அரை நொடியில் அரசாணை வந்துவிடுமே.
ஆமாம் தலைவா….அதுமட்டுமல்ல, தலைமை செயலகத்தில் சந்திரமான அதிகாரி செல்வ பதவியில் இருக்கும் வரையில் அரசாணை வெளி வருவது கஷ்டமே என தலைமை வட்டார தகவல்.
அப்படி என்றால் இவர்கள் போராட்ட களம் கோட்டை நோக்கி தான் இருக்க வேண்டும் போல…
சரியாக சொன்னீர் தலைவா…ஓய்வூதிய கோப்பு அரசாணையாக வரவேண்டும் என்றால் தலைமை செயலக உச்ச அதிகாரிகளும், தமிழக முதல்வரும் மனது வைக்க வேண்டும்.அதற்கு, பனகல்மாளிகை கடந்து கோட்டை நோக்கி இவர்களின் போராட்ட பயணம் செல்லவேண்டும்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல எடப்பாடி அறிக்கை உள்ளதே ஒற்றரே…
ஆமாம்…ஊராட்சி செயலாளர்கள் திமுகவிற்காக வீடுதோறும் வேலை செய்கிறார்கள் என அபாண்டமான குற்றச்சாட்டை அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.அந்த அறிக்கை சென்னையில் போராடும் ஊராட்சி செயலாளர்களை மிகவும் பாதித்து உள்ளது. அதற்கு எதிர்வினையாக சங்கம் என்ன செய்யப் போகிறது என பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த அறிக்கை ஊராட்சி செயலாளர்கள் மீது பெரும் அபான்டமான குற்றச்சாட்டு அல்லவா ஒற்றரே…
ஆமாம் தலைவ..அதற்கான எதிர்வினை என்ன? போராட்டம் செல்லும் பாதை என்ன? ஓய்வூதிய கோப்பின் நிலை என்ன? என புதிய தகவல்களோடு விரைவில் சந்திக்கிறேன் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.





























