பணம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை கணக்காக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதற்காக tnpass என இணைய தளம் உருவாக்கப்பட்டு, அதன் மூலமாக ஊராட்சியின் வரவினமாக உள்ள வரிகள், கட்டிட அனுமதி என அனைத்தும் செலுத்தும் வசதி செய்யப்பட்டன.
நமக்கு வந்த தகவல்படி, ஒரு ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக கட்டப்பட்ட தொகை எந்த கணக்கில் வரவாகிறது என தெரியவில்லை. இதுவரை, நான்கு லட்சம் ரூபாய் வரை செலுத்தி விட்டார்கள்.
ஊராட்சி சார்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுவாக அளித்துவிட்டார்கள்.. ஊராட்சிக்கு சொந்தமான பணம் எந்த கணக்கில் வரவாகி உள்ளது என கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இந்த ஒரு ஊராட்சியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் இதுமாதிரியே உள்ளதாக தகவல். பல கோடி ரூபாய் பணம் எந்த கணக்கில் உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
அந்த பணத்தை செலுத்தியது எல்லாம் அன்றாடம் கூலிவேலை பார்க்கும் ஏழை மக்கள். தாம் செலுத்தும் பணம் தங்களது ஊராட்சியின் நலத்திட்டங்களுக்கு பயன்படும் என்ற அவர்களின் நம்பிக்கை வீண்போய் விட்டது.
ஊராட்சிகளின் பணி பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, இதுநாள் வரை அந்த பணத்திற்கான வட்டி என கணக்கிட்டால், கோடிகளுக்கு வட்டியாக பல லட்சங்கள் வந்திருக்கும்.
உண்மையில் என்ன நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியவேண்டும்.
இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கையை ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் எடுக்க வேண்டியது அவசரமான அவசியம் ஆகும். ஊரக வளர்ச்சி துறையில் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் இரண்டு இந்திய ஆட்சிப் பணியாளர்களும் இதனை செய்வார்கள் என முழுமையாக நம்பலாம்.
இந்த விடயத்தில் இறுதி முடிவு எட்டும் வரை, தொடர்ந்து செய்தி வெளியிடுவோம். இது மென்பொருள் தவறா? மனித தவறா என்பது தெரியவேண்டும். சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்குரிய பணம் வட்டியுடன் வரவு வைக்கப்பட வேண்டும்.