28 மாவட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால், ஜனவரி 6 முதல் தனி அலுவலரின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன.
ஊராட்சிகளின் திட்டப. பணிகள் செயல்படும் விசயத்தில் தனி அலுவலர் காலத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் காலத்திற்கும் பெரிய வேறுபாடு இருக்காது.
ஆனால், அன்றாட பணிகளின் செயல்பாடுகளில் பெரும் சிக்கல் உள்ளது.
அடிப்படை பணிகள்
திடீரென ஏற்படும் அன்றாட பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யும் அதிகாரம் ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலாளர் வசம் கிடையாது. தனி அலுவலராக உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதியோடு தான் அடிப்படை பணிகளை கூட செயல்படுத்த முடியும்.
பொதுமக்களின் அதிமுக்கிய தேவையானது குடிநீர் பிரச்சனை. சிறிய ஊராட்சியில் கூட குறைந்த பட்சம் 20 மின்மோட்டார்கள் உள்ளன. மத்திய அரசின் திட்டமான வீட்டுக்கொரு குடிநீர் இணைப்பும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் திடீரென ஒரு மின்மோட்டார் பழுதடைந்தால் அதை சரிசெய்வதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோப்பு வழியாக அனுமதி பெற்ற பிறகே பணியை ஆரம்பிக்க முடியும்.
ஊராட்சி செயலாளர்
ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் குறைந்த பட்சம் 25 ஊராட்சிகள் தொடங்கி, அதிகபட்சமாக 60 ஊராட்சிகள் உள்ளன. அந்த அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரே தனி அலுவலர். அவரின் அனுமதி பெற்ற பிறகே பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்கும் நபர் ஊராட்சி செயலாளர். மக்களின் கோபம் நேரடியாக ஊராட்சி செயலாளர் மீதே பாயும். ஆனால்,மக்கள் பிரச்சனையை தீர்க்க தனி அலுவலரின் அனுமதியை வாங்குவதற்குள், மக்களின் கோபம் உச்சகட்டத்தை எட்டிவிடும்.
அடிப்படை பணி முடிந்து அதற்கான தொகை கொடுப்பதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு செல்லும் ஓடிபியை கொண்டே வழங்க முடியும்.
ஆக…அனைத்து பக்கமும் ஏச்சும் பேச்சும் ஊராட்சி செயலாளர்களுக்கு மட்டுமே.
குறிப்பாக, திடீரென பழுதாகும் மின் மோட்டாரை சரிசெய்வதற்கு முன், உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் இரண்டு மின்மோட்டார்களாவது அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்கள் தான் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
இப்படி…அன்றாட பணிகளில் உள்ள சிரமங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.
குறிப்பு:- இந்த வேலையை நான் சொல்பவருக்குத் தான் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டும் ஆளும்கட்சியினர், மக்களின் அன்றாட பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.