நகரமயம் ஆகுதலும் – ஊராட்சிகளின் நிலைமையும்

12525

தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12525 ஆகும். தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணைப்படி 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைக்கப்பட உள்ளன.

அந்த அரசாணையில், நகரங்களுக்கு அருகில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை பணிகளை செய்வதற்கு நிதி ஆதாரம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையும் இல்லை என கூறி உள்ளது.

அதற்காக ஊராட்சிகளை நகரமயமாக்குவது தான் தீர்வா என அறிவு நிறை அதிகாரிகள் சிந்திக்கவேண்டும்.

பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் நிதி ஆதாரம் என்பது வரி வசூல் மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு மட்டுமே. மத்திய அரசின் பங்களிப்பு நகர நிர்வாகங்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை.

இன்று,நகர நிர்வாகங்களில் பணிபுரியும் அதிகாரிகளிடம் கேட்டால் தான் அங்கு நிலவும் அவலநிலை தெரியும். அதைவிட, அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்து விட்டாதா என்ற கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது.

ஊராட்சிகள்

ஊராட்சிகளின் தேவைகளுக்காக நகராட்சிகளாக மாற்றுவது என்பது செருப்புக்காக கால்களை வெட்டுவது போல என்பதை முதலில் உணரவேண்டும்.

வளர்ந்து விட்ட ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை தீர்த்து வைப்பதற்கு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உரிமையை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கலாம்.

Also Read  TNGOTS- மாநில செயற்குழு கூட்டம்

நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய முடியாது என்றால், தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் அதிகாரத்தை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு கொடுக்கலாம்.

அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக வரி வசூல் என்ற நிலையை மாற்றி, நகரத்திற்கு இணையாக வளரும் ஊராட்சிகளின் வரிகளை அதன் தற்போதைய நிலைக்கு ஏற்ப தீர்மானிக்கலாம்.

இப்படி பல்வேறு வழிமுறைகளை வகுத்து, ஊராட்சிகளை காப்பாற்ற அதிகாரிகள் முன்வரவேண்டும். ஏனெனில், கிராமங்கள் நகரமயம் ஆகிவிட்டால், மொத்தமாக விவசாயம் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுந்த நாடாக இருக்க வேண்டும் என்றால், ஊராட்சிகள் ஊராட்சிகளாகவே இருக்கவேண்டும்.

ஊராட்சிகளில் மாசில்லா தொழில்களை தொடங்கி, குறிப்பாக…அந்தந்த மண் சார்ந்த தொழில்களை தொடங்கி அனைவரின் வேலைவாய்ப்பிற்கு வழி காட்ட வேண்டும்.

தமிழர் திருநாளை கொண்டாடும் இந்த காலகட்டத்தில், கிராமங்களை காப்பாற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.

விவசாய நிலமே இல்லாத , நகரங்களுக்கு மிக அருகில் உள்ள  ஊராட்சிகளை இணைப்பதில் எந்த தவறும் இல்லை.