என்ன ஒற்றரே…பரபரப்பான செய்தியா?
ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சித் துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு 60க்கும் மேற்பட்ட திட்ட இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆமாம் ஒற்றரே…அதில் என்ன பிரச்சனை?
இடமாறுதலில் பணம் கைமாற்றப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டை ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த சங்கம் புகாராக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ளது தலைவா…
அந்த புகாரை படித்தேன். எங்கள் லெட்டர் பேடை யாரோ பயன்படுத்தி உள்ளதாக அதே சங்கத்தினர் கூறுவதாக செய்தி வருகிறதே ஒற்றரே..

இருக்கலாம் தலைவா…ஆனால்,அந்த புகார் கடிதத்தில் உள்ளதை ஊரக வளர்ச்சித்துறையினர் அனைவரும் ஆமோதிக்கின்றனர் தலைவா..நேர்மையான ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசில் இடமாறுதலுக்கு பணம் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனா, ஆளும் வர்க்கம் அதை மறுக்கிறதே ஒற்றரே…
அப்படியானால் வெளிப்படையான விசாரணையை நடத்திட முன்வர வேண்டும்.கடந்த ஆட்சியில் கூட இல்லாத பண பரிமாற்றம் இந்த ஆட்சியில் நடந்துள்ளது என்ற செய்தி ஆளும்கட்சிக்கு நல்லது இல்லை தலைவா…
சரியாக சொன்னீர் ஒற்றரே…வெளிப்படையான விசாரணையே இதற்கு தீர்வாக அமையும்.
ஆமாம் தலைவா…குற்றச்சாட்டு கூடுதல் இயக்குநரான கவிதாவை நோக்கியே உள்ளதால்,அவரை உடனடியாக இடமாறுதல் செய்த பிறகே விசாரணையை தொடங்க வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

























