தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா…
“இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல… இதுக்கு மத்தியில, கோட்டையில் கோலோச்சும் மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், வேறொரு பெண் அதிகாரியை அந்த பதவிக்கு பரிந்துரை பண்ணிட்டாரு பா…
“இதனால, சீனியர் கடுப்பாகிட்டாராம்… ‘அதிகாரிகள் பேச்சை கேட்டு ஆட்சி நடத்துனா என்ன அர்த்தம்… கட்சிக்காக கடுமையா உழைச்ச என்னை மாதிரி சீனியர்களை மதிக்காம இப்படி செய்றாங்களே’ன்னு தனக்கு நெருக்கமானவங்களிடம் புலம்பியிருக்காரு.
இப்படி ஒரு செய்தி தினமலர் டீகடை பெஞ்சில் வந்தது.
ஐ.ஏ.எஸ். அந்தஸ்து
நேரடியாக தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சி பணியாளர் ஆவது ஒருமுறை.
குருப் 1 தேர்வு உட்பட பல தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று இ.ஆ.ப. ஆக தகுதிக்கு உயர்வது மற்றொரு முறை.
இரண்டாவது முறையில் பணியில் சேர்பவர்கள் மற்ற துறைகளில் இருந்து இஆப ஆக உயர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். ஊரக வளர்ச்சி துறையில் அந்த வாய்ப்பு மிகமிக குறைவு.
வாராது வந்த வாய்ப்பு
தற்போது ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக பணியாற்றி வரும் பொன்னையா இஆப அவர்களே ஊரக வளர்ச்சி துறையில் இருந்து இஆப நிலைக்கு உயர்ந்தவர்.
தற்போது அந்த வாய்ப்பு இந்த துறையில் பணிபுரியும் இருவருக்கு உருவானதாம்.இருவரில் அமைச்சரின் சிறப்பு உதவியாளராக இருக்கும் ஒருவருக்கு உறுதியாக கிடைக்கும் என்ற நிலையில் தான் வாய்ப்பு பறிபோய் இருக்கிறதாம். இவருக்கு சூனியரான பலர் இஆப ஆக தகுதி உயர்வு பெற்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற துறையில் இருந்து இஆப ஆக தகுதி பெறும் எண்ணிக்கையை விட, ஊரக வளர்ச்சித்துறையில் தகுதி உயர்வு பெறுவது குதிரை கொம்பாக உள்ளது.
குருப் 1 தேர்வில் தேர்வு பெற்று பிற துறைகளில் பதவி உயர்வு பெற்று இஆப அந்தஸ்தை அடைந்து ஊரக வளர்ச்சி துறையில் உயர்பதவிக்கு ஒருவர் வருவார். அவரோடு அதே காலகட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் பணியில் சேர்ந்தவர்,அவருக்கு கீழே பணிபுரிவது எப்படிப்பட்ட நிலை என்பதை உணர வேண்டும்.
இதற்கு ஒரு வழிமுறை கிடைப்பதற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், முதன்மை செயலாளர், இயக்குநர் என மூவரின் காலகட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.
அரசு சரியான விதிமுறைகள் வகுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.