ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்களின் குமுறல் குரல்

உலவும் செய்தி

*Hello… நீங்க ஊரக வளர்ச்சித்துறை Assistant director??*

அப்ப கொஞ்சம் நில்லுங்க, உங்க கிட்ட தான் கொஞ்சம் பேசனும்..

*இன்றைய நிலையில் ஊரக வளர்ச்சித் துறையிலேயே மிகவும் கடினமான பணி சூழலில் பரிதாபமாக பணிபுரிந்து வரும் அலுவலர்கள் யார் தெரியுமா? உதவி இயக்குனர்கள் தான்.*

இவர்களுக்கென்று குரல் கொடுக்க தமிழ்நாட்டில் ஒருவருமே இல்லை. தினம் தினம் கூகுள் மீட், தினம் தினம் ஆய்வுக் கூட்டங்கள், தினம் தினம் whatsapp மூலம் உத்தரவுகள் என்று ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 20 மணி நேரம் இவர்கள் அலுவலகங்களிலேயே தான் தவம் கிடக்கிறார்கள்.

சென்னை சைதை மாளிகையின் குறுநில மன்னர்களிடம் இருந்து வரும் வாட்ஸாப் அதிகார தோரணைகளிலான கட்டளைகளை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றுவது மட்டுமே அவர்களுக்கான ஒரே பணி. வீடு, மனைவி, மக்கள், நண்பர்கள், உணவு என சகலமும் மறந்து விட்டு இவர்களின் நினைவில் நிற்கும் ஒரே விஷயம் இந்த மாத *Plan of action* மற்றும் Target-Progress மட்டுமே..

ஏறத்தாழ இயந்திரங்களை போல மாற்றப்பட்ட இடைநிலை அலுவலர்கள் இவர்கள்..

வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றும் போது கூட சுதந்திரமாக, மக்களுக்கு தேவையான திட்டங்களை, அவர்களுக்கு உரித்தான அதிகாரங்களுடன் இவர்களால் செயல்படுத்த முடிந்தது. இப்போது எந்த அதிகாரமுமில்லாத, ஆனால் 24மணிநேரமும் வேலை மட்டுமே செய்ய பணிக்கப்பட்ட அலுவலர் பெருமக்கள் இவர்கள்..

சமீபத்தில் எதேச்சையாக ஒரு உதவி திட்ட அலுவலர் நிலை அலுவலர்களுக்கான காணொளி ஆய்வு கூட்டத்தை பார்க்கவும், கேட்கவும் வாய்ப்பு அமைந்தது.
*இடைவிடாத அர்ச்சனைகள், திரும்ப நம்மால் சொல்லக்கூட முடியாத அளவிலான கடுஞ்சொற்கள்,* வீட்டில் போய் இந்த மாதிரி இன்று என்னை ஒரு உயர் அதிகாரி திட்டினார் என்று கூட புலம்ப இயலாத அளவில் தங்களுடைய இருப்பிடங்களில் இருந்து வெகு தூரங்களில் பணியமர்த்தப்பட்டு, சோற்றுக்கும் கஷ்டப்பட்டு, இரவில் நல்ல தூக்கத்திற்கும் வாய்ப்பு கிடைக்காமல் Zombies போலத்தான் இன்று உதவி இயக்குனர்கள் பணிபுரிகிறார்கள்.

ஒரு பக்கம் கீழ்நிலை அலுவலரிடம் இவர்களால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க சொல்லி நெருக்கடி தர வேண்டிய கட்டாய நிலை. மேலே இருந்து, இந்த பணியை முடித்து விட்டீர்களா என்று இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல்கால polling percentage கேட்பது போல வாட்ஸ் அப்பில் மிரட்டல்கள், எந்த பணியையும் முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் கடும் பணிச்சுமை இன்னொரு பக்கம்.. மாவட்ட அளவிலான மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் ஆட்சியர்கள் இவர்களை கூப்பிட்டு தினம் தோறும் நடத்தும் ஆய்வுக் கூட்டங்கள்…

Also Read  கொரோனா பணியின்போது பலியான விஏஓ குடும்பத்திற்கு நிவாரணமும்,வேலையும்- அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி

ஆனால் இவர்களின் இத்தனை கடினமான பணிச்சூழலை பற்றி அரசிடமும், உயர் அதிகாரிகளிடமும் எடுத்துச் சொல்ல *ஒரு சங்க அமைப்பு கூட இல்லை* என்பது தான் ரொம்ப பரிதாபம்..

பெயரளவிற்குள்ள உதவி இயக்குனர் நிலை அலுவலர்களுக்கான சங்கங்களும் வாய் மூடி மௌனியாகவே இருக்கிறார்கள். அதன் நிர்வாகிகளுக்குள்ளேயே ஆயிரம் கருத்து மோதல்கள். எதிர்த்து பேசி விட்டால் இன்னும் கூடுதல் தூரத்திற்கு மாற்றி விடுவார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம், தகுந்த அடிப்படை வசதிகள் கூட இல்லாத அலுவலக சூழல் ஒரு பக்கம், இவர்களுக்கு என்று தனி அறை கூட இல்லாமல் ஏதோ ஒரு மூலையில் ஒரு நாற்காலியும் மேசையும் கொடுக்கப்பட்டு தான் பல மாவட்டங்களில் அமர்ந்திருக்கிறார்கள்.

அலுவலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு டேபிளை போட்டுக்கொண்டு அதில் whatsapp மற்றும் google meet சம்பந்தமாக மொபைல் ஃபோனையே கண்களை விரித்து 20 மணிநேரமும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இவர்கள் உண்மையிலேயே பாவப்பட்ட ஜீவன்கள் தான்..

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை சொந்த ஊரில், சொந்த வீட்டில் நிம்மதியாக பணிபுரிந்து விட்டு, அதிலிருந்து பதவி உயர்வு மூலம் உதவி இயக்குனரானவர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டு 300 கிலோ மீட்டர் அதிகமாக பணி மாறுதலில் பணிபுரியும் அவலச்சூழல். ஒரு நிலையில் சற்று கற்பனை செய்து பாருங்கள், சரியான வீடு கிடையாது, அரசாங்கம் சரியான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது கிடையாது.
முக்கியமாக உடலுக்கு ஏற்றவாறு நல்ல உணவு கூட கிடைக்காது.

அதிலும், இந்த உதவி இயக்குனர்கள்
அனைவருமே 50 – 55 வயது எட்டியவர்கள் என்பதால், உடலில் 1008 வியாதிகளும் உணவு கட்டுப்பாடு தேவைகளும் நிலவும் சூழலில் அதற்கேற்ற உணவும் கிடைக்காமல், தூக்கமின்றி அலுவலகத்திலும் எந்தவித பாதுகாப்பு & அரவணைப்பு & சப்போர்ட் எதுவும் இல்லாமல் பணி செய்யும் அவர்களை பார்த்தால் *இனி எந்த காலத்திலும் உதவி இயக்குனர் பதவி உயர்வே வேண்டாம்* என்று தான் அனைவருமே எண்ணிவிடுகிறார்கள்.

ஆனால் உண்மையில் பார்த்தால் *டெபுடி கலெக்டர் என்ற அந்தஸ்திற்கு நிகரான இந்த பதவி ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு காலத்தில் மிகவும் அதிகாரம் மிக்க முக்கியமான பதவியாக இருந்தது தான்*
இன்று காலப்போக்கில் இந்த Asst.Director பதவிகள் அடித்து துவைக்கப்பட்டு வெற்று ஜபர்தஸ்துக்கான பதவி போல மாற்றப்பட்டுவிட்டது தான் இதன் காரணம்.

Also Read  மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை மானியம்

உண்மையில், ஊராட்சி சட்டத்தின் முக்கியமான பல அதிகாரங்களை இன்றளவும் கூட பேணி பராமரிக்க வேண்டிய பொறுப்பு இந்த உதவி இயக்குனர் பதவிகளுக்கு உண்டு. ஆனால் அதை யாரும் உணர்ந்து பணிபுரிவதில்லை, அதைவிட யாரும் இவர்களை அப்படி பணிபுரிய விடுவதில்லை…

*இவர்களுக்கென்று குரல் கொடுக்க ஒரு நல்ல ஊழியர் சங்க அமைப்பு இன்று கட்டாயம் தேவை.*
இவர்களுக்கு என்று குரல் கொடுத்து, அவர்களுக்கு கோரிக்கைகளை அரசு அளவில் எடுத்துச் செல்ல வலிமையான ஒரு அமைப்பு தேவை. ஆனால் தாங்கள் மட்டும் பாதுகாப்பான அருகாமை இடங்களில் பணியமரத்தப்பட்டுள்ள சூழலில் இவர்களுக்கு என்று எந்த சங்க அமைப்பின் தலைமையும் பேசுவதில்லை..
பேசினாலும் அவர்களையும் கூட தூர தேசத்திற்கு மாற்றி விடுவார்கள் என்ற பயம் ஒரு புறம் அல்லது அதிகாரமே இல்லாத ஓரங்கட்டப்பட்ட பதவிகளில் அமர்த்தி விடுவார்களோ என்ற பயம் ஒருபுறம்.

இவர்களது உரிமைகளை எடுத்துக் கூறி, இவர்களுக்கென்று ஒரு பாதுகாப்பான மன நிம்மதியுடனான பணியிடத்தை உறுதி செய்ய கட்டாயமாக ஒரு தொழிலாளர் உரிமை காக்கும் அமைப்பு தேவை. அடிப்படை ஊழியர்களுக்குள்ள பணி பாதுகாப்பு கூட இவர்களுக்கு இல்லை என்ற சூழலில், இவர்களுக்கென்று எடுத்துப் பேச ஒரு அமைப்பு தேவை.

இன்றைய சூழலில், மற்ற அனைத்து நிலை அலுவலர்களுக்கும் வலுவாக சங்க அமைப்புகள் உள்ள சூழலில், இந்த *உதவி இயக்குனர்களுக்கும், இணை இயக்குனர்களுக்கும், இன்னும் சொல்லப்போனால் கூடுதல் இயக்குனர்களுக்கும் கூட* அரவணைத்து பாதுகாக்க ஒரு தொழிற்சங்க அமைப்பு கண்டிப்பாக தேவை.

உதவி இயக்குனர்கள் இதை சற்றாவது எண்ணிப் பார்த்து, தங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்திக் கொண்டு ஒரு வலுவான சங்க அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது..

உலகத் தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள எட்டு மணிநேர பணி என்ற அடிப்படை உரிமையை கூட இவர்களால் கேட்கவும் முடியாது, அனுபவிக்க முடியாது, போராடி பெறவும் முடியாது என்ற அவல சூழலில்.. கண்டிப்பாக இந்த உதவி இயக்குனர்கள் தங்களுக்குள் எந்த ஈகோவும் இடிக்காத அளவுக்கு ஒன்று கூடவும், ஒருமித்த சிந்தனையும் ஒன்றிணைந்த செயல்பாடும் காலத்தின் கட்டாயம்..

சிந்திப்பீர்
ஒன்று படுவீர் செயல்படுங்கள் உதவி இயக்குனர்களே..

(இப்படி ஒரு செய்தி அதிகாரிகளின் குழுக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.)