ஓய்வூதியம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஒற்றை கோரிக்கையாக ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி,முதல்கட்டமாக ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங் களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னை சைதாபேட்டை பனகல்மாளிகை அருகே ஒருநாள் பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்த போகிறார்கள்.
செலவு
ஓய்வூதியம் என்ற அவர்களின் கோரிக்கைக்கான முடிவு, 26ம் தேதி ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் தெரியுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.மானிய கோரிக்கைக்கு பிறகு, ஆணையர் சங்கத்தினரை அழைத்து பேசி, நல்ல முடிவு எட்டுவதற்கு வழிவகை செய்வார் என அதன் நிர்வாகிகளில் ஒரு சாரார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதையும் கடந்து சென்னையில் போராட்டம் நடைபெற்றால்,குறைந்த பட்சம் மாவட்டத்திற்கு 100 பேர் கலந்து கொண்டால் கூட 3000க்கும் அதிகமானோர் சென்னை வருவார்கள். அவர்களின் போக்குவரத்து மற்றும் ஒரு நாள் செலவு சுமார் ஒரு நபருக்கு 3ஆயிரம் ஆகலாம்.
அப்படி குறைந்த பட்சம் கணக்கிட்டால் கூட,90லட்சம் ரூபாய் செலவாகும்.இதே சங்கத்தினர் 16 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சங்கத்திற்கு சொந்தமாக திருச்சியில் தலைமை அலுவலகம் கட்டி வருகின்றனர். அந்த கட்டிட செலவிற்கு இந்த பணம் பயன்பெற்றால் சிறப்பாக இருக்கும்.
ஆகவே….ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினருக்கும் பல சீர்திருத்தங்களை செய்துவருகிறார். தமிழக அரசு முடிவுக்கு வர இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்து அவர்களின் வாழ்வாதார கோரிக்கைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். நிச்சயம் நடக்குமென நாமும் நம்புகிறோம்.