வனத்துறை சார்ந்த ஊராட்சிகளின் நிலை – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…சிக்கலான செய்தியா.

ஆமாம் தலைவா…மலைப்பிரதேசங்களில் உள்ள ஊராட்சிகளில் சாலைவசதி,சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவிக்கிறது.குறிப்பாக,கொடைக்கானல் பகுதிகளில் காணப்படுகிறது.

கோடைக்காக கொடைக்கானல் சென்று வந்தீரா ஒற்றரே…

ஆமாம் தலைவா…மன்னவனூர் ஊராட்சியில் குறிப்பிட்ட சாலை வனத்துறைக்குள் வருவதால் ஊராட்சி நிர்வாகத்தால் சாலையை சீரமைக்க முடியவில்லை. மக்களின் கோபம் ஊராட்சி நிர்வாகத்தின் மேல் உள்ளது.

ஒற்றரே…ஊராட்சி நிர்வாகத்தினர் பாவம் தான்.

அதுமட்டுமல்ல…கூக்கால் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஓர் அழகிய ஏரியும்,அதனை ஒட்டிய இடம் வனத்துறை வசமும் உள்ளது. ஏரியும் முழுவதும் தாமரை படர்ந்துள்ளது. அதனை சரிசெய்து,ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக படகு பயணம் ஏற்பாடு செய்திட சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர் தலைவா…

வனத்துறை மட்டுமல்ல,பொதுப்பணி துறையும் ஒத்துழைக்க மறுக்கிறதா ஒற்றரே…

பொதுப்பணித்துறையாவது ஓரளவிற்கு ஒத்துழைப்பை கொடுக்கும்.தனது வழி தனி வழி என தமிழகம் முழுவதும் வனத்துறை தனி ராஜ்ஜியமே நடத்துகிறது தலைவா…

பிரச்சனைகளுக்கு தீர்வு தான் என்ன ஒற்றரே…

ஊராட்சிக்கு உரிமையான பழைய குற்றால அருவியை பொதுப்பணி துறையில் இருந்து மீட்டு, மீண்டும் ஊராட்சியின் வசம் கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரரான இன்றைய ஆணையரும் அன்றைய திருநெல்வேலி மாவட்ட திட்ட இயக்குநருமான பா.பொன்னையா இஆப அவர்கள் முயற்சி செய்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் தலைவா…

Also Read  அக்டோபர் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - ஊராட்சி செயலாளர்கள் தேர்வு

கோடை விடுமுறை கழிக்க சென்ற இடத்திலும் செய்தியை சேகரித்து வந்துள்ளீர்கள் ஒற்றரே…

தலைவா…கொடைக்கானல் மட்டுமல்ல,மலை சார்ந்த அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது. வனத்துறையோடு பேசி ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் சரி செய்திடல் வேண்டுமென கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.