ஆணையரின் உத்தரவையும் மதிக்காத போக்கு ஊரக வளர்ச்சித் துறையில் நடந்து வருகிறதாம் ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிஏபிடி மற்றும் பிடிஓ என யாரும் மதிப்பதில்லை. ஆளும் கட்சியினர் தலையீடு ஒருபுறம் என்றால்,சங்கங்களின் சண்டை மறுபுறம்.
சங்கங்கள் இடமாறுதலில் என்ன பங்கை வகிக்கிறது ஒற்றரே.
ஒரு குறிப்பிட்ட சங்கத்தில் பிடிஓக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களாம். அந்த சங்கத்தில் சேரும் ஊராட்சி செயலாளர்களுக்கு அவர்கள் கேட்கும் ஊராட்சிகளுக்கு இடமாறுதல் போடுகிறார்களாம் தலைவா..
ஆமாம் ஒற்றரே…எனக்கும் அப்படி ஒரு செய்தி கிடைத்தது. பாதிக்கப்படும் மற்றொரு சங்கம் இந்த பிரச்சனையை ஆதாரத்தோடு நீதிமன்றத்தை அணுகப் போவதாக கூறுகிறார்களாம்.
இடமாறுதல் மட்டுமின்றி, ஒரு பில்லை அங்கீகரிக்க வேண்டுமென்றாலும் எங்கள் சங்கத்தில் சேர வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்களாம் தலைவா…
குறிப்பிட்ட மாவட்டத்திலா அல்லது தமிழ்நாடு முழுவதிலுமா ஒற்றரே…
தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.ஆனா,தென்காசி,,சிவகங்கை,பெரம்பலூர்,தஞ்சாவூர்,கரூர்,நாமக்கல் போன்ற சில மாவட்டங்களில் மிக அதிகமாக அராஜக போக்கு அரங்கேறி வருகிறதாம் தலைவா.
இதற்கு என்ன தான் முடிவு ஒற்றரே…
அனைத்தும் அறிந்தவர் ஆணையர் அவர்கள். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு போல இணையவழி விண்ணப்பம் மற்றும் ஒன்றிய அளவில் கலந்தாய்வு இடமாறுதல் குழுக்களை உருவாக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்க பிரதிநிதிகள் அதில் இடம் பெற்றால் பிரச்சனை ஓரளவுக்கு தீரும் தலைவா…
பெண் பணியாளர்களை அவமானப்படுத்தும் வட்டார வளர்ச்சி அலுவலரை காப்பாற்றும் சங்கமும் இருக்கத்தானே செய்கிறது ஒற்றரே…
சரியாக சொன்னீர்…அவர்கள் வீட்டு பெண்கள் பாதிக்கப்படும் போது தான் அவர்களுக்கு வலிக்கும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.