ஊரக வளர்ச்சித்துறையின் அறிவிப்புகள்

மார்ச் 26 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அறிவித்த அறிவிப்புகள்:-

1. 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடங்கள் புதிதாக கட்டப்படும்.

ஊரக மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் 157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.

2. ஊரகப் பகுதிகளில் 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டப்படும். கட்டடங்கள்

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அங்கன்வாடி மையங்கள் முக்கிய பங்களிக்கின்றன. ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நிலையான கட்டடங்களின் தேவை உள்ளது. 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

3. ஊரகப் பகுதிகளில் 500 முழுநேர நியாய விலைக்கடைகள் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஊரகப்பகுதிகளில், மக்கள் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெறும் பொருட்டு, 500 முழுநேர நியாய விலைக்கடைகள் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

4. தமிழ்நாடு அரசின் “பசுமை தமிழ்நாடு இயக்கத்தை” முன்னெடுத்து செல்லும் வகையில் 1 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.

புவி வெப்பமடைதலை தடுத்திடவும். ஊரக பகுதிகளின் பசுமையை அதிகரிக்கவும், 1 கோடி மரக்கன்றுகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு நிலங்கள், நிறுவனங்கள் சாலையோரங்களில் நடப்படும். 

5. ஊரகப் பகுதிகளில் 500 அரசு பள்ளிகளில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுசுவர் கட்டப்படும்.

ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, 500 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப/நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு, சுற்றுசுவர் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

6. ஊரகப் பகுதிகளில் இயற்கை மற்றும் நீர் வள பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

ஊரகப் பகுதிகளில் இயற்கை மற்றும் நீர் வள ஆதாரத்தை பெருக்கவும், சமுதாய நிலங்களை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், புதிய குளங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சமுதாய நிலங்களை சமன்படுத்தி மேம்படுத்துதல் போன்ற பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

7. ஊரகப் பகுதிகளில் உள்ள மண் சாலைகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

குக்கிராமங்களை இணைக்கும் விதமாகவும் மற்றும் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்லவும், தங்களது விளைப்பொருட்களை சந்தைகளுக்கு விரைவாக எடுத்துச் செல்லவும், ஊரகப் பகுதிகளில் உள்ள மண் சாலைகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

8. ஊரக பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சந்துகளை மேம்படுத்தும் பணிகள் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

ஊரகப் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில், போக்குவரத்திற்கு தேவையான சாலை வசதிகளை ஏற்படுத்திட சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல் பணிகள் ரூ.350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

Also Read  ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் இஆப

9. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள் 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டப்பட்டு வருகின்றன. 2025 26 ஆம் ஆண்டில், ஊரகப் பகுதிகளில் புதிதாக குழந்தை நேய வகுப்பறைகள் 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

10. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் 60 கோ டி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் பெருமளவில் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. 2025-26 ஆம் ஆண்டிலும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

11. ஊரகப் பகுதிகளில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விளைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் குக்கிராமங்களிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளை பருவகாலங்களிலும் சென்றடைவதற்கு கிராமச் சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.

12. ஊரக பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.

ஊரக வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தடையற்ற குடிநீர் விநியோகிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 புதிய மேல்நிலை  நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்

13. நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக 69 கோடி ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு குடிநீர், சுகாதாரம், சாலை பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக 10 இலட்சம் ரூபாய் வீதம் 69 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

14. தமிழ்நாட்டில் உள்ள 278 மலைக்கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் உள்ள 278 மலைக்கிராம ஊராட்சிகளுக்கு, குடிநீர், சுகாதாரம், சாலைபராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக 30 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

Also Read  ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது?

15. உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும்.

வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவ்வூராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திட ஏதுவாக, தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக 10 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

16. துப்புரவுப் பணியாளர்களின் நலப்பணிகளுக்காக துப்புரவு தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படும்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துப்புரவு தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்

17. 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் புதிதாக கட்டப்படும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நல்ல அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய, பழுதடைந்த கட்டடங்களுக்கு பதிலாக 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக் கட்டடங்கள் தலா 5.90 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

18. நமக்கு நாமே (ஊரகம்) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 150 கோடி ரூபாய் ஆக உயர்த்தப்படும்.

கடந்த ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் பெருமளவில் வரவேற்பு உள்ளதால் 2025-26 ஆம் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 150 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

19. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பல்வேறு அலுவலக மற்றும் பொது பயன்பாட்டு கட்டடங்களை பராமரிக்க விரிவான பராமரிப்பு கொள்கை வகுக்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பள்ளிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மகளிர் 乐山 உதவிக்குழு கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், நூலகக் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு அலுவலக லுவலக மற்றும் பொது பயன்பாட்டுக் கட்டடங்களை புனரமைத்து முறையாகப் பராமரிப்பதற்காக, விரிவான பராமரிப்புக் கொள்கை (Building Maintenance Policy) வகுக்கப்படும். 2025-26 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதற்கென மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

20. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிராமப்புரங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 1500 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.

கிராமப்புரங்களில் நூலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் அரசு கட்டடங்களுக்கு அருகில் உள்ள பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடம் இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட 1,500 சமுதாய சுகாதார வளாகங்கள் 31.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.