மாற்றம்
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களின் கண்ணீர் கடிதம் ஒன்று நமது செய்தி இணைய தளத்தில் வந்ததல்லவா தலைவா…
ஆமாம் ஒற்றரே…குறிப்பிட்ட ஒரு அதிகாரி கொடுரமான வார்த்தைகளால் திட்டியதாக வந்ததே..
ஆமாம் தலைவா…அதே அதிகாரி தமிழகத்தின் தென்கோடி மாவட்டத்தில் பணியாற்றும் போது,அங்கு தனக்கு கீழ்பணிபுரிந்த ஊழியர்களை மிக கேவலமாக பேசி உள்ளார். அந்த விடயம் மனித உரிமை ஆணையம் வரை சென்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
மீண்டும் அதே பாணியில் தொடர்வது தவறுதானே ஒற்றரே…
தவறுதான் தலைவா…அதேவேளையில் அந்த அதிகாரி நேர்மையின் சிகராம். யாராலும் குற்றம் சொல்ல முடியாத நேர்மையாளராம். ஆனா,கடும்சொல் பேசுவதை மாற்றிக்கொள்ளவே இல்லையாம்.
மேல்நிலை அதிகாரிகள் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை வாட்டி வதைக்கும் செயல் எல்லா துறைகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுத்தான் வருகிறது ஒற்றரே…
ஆம் தலைவா…இந்த விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரி தன்னை மாற்றி கொள்ளவேண்டும். இல்லையேல், போராட்ட களத்தை நோக்கி மாவட்ட அதிகாரிகள் செல்லும் நிலை ஏற்படலாம்.
வரும்முன் காப்பதே அறிவாளித்தனம் என்று சொல்லிவிட்டு திரும்பி பார்ப்பதற்குள் மாயமாய் மறைந்து விட்டார் ஒற்றர்