என்ன விசயம் ஒற்றரே…
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைமுறை படுத்திவருகிறார்கள் தலைவா..
மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதானே ஒற்றரே…
ஏற்கனவே மக்களுடன் முதல்வர் என்ற பெயரில் ஏற்கனவே முகாம் நடத்தி வந்தனர். தற்போது உங்களுடன் ஸடாலின் என்ற பெயரோடு பழைய மொந்தையில் புதிய கள்ளாக புறப்பட்டு உள்ளனர் தலைவா…
ஊரக வளர்ச்சித்துறைக்கு என்ன வேதனை ஒற்றரே…
16 துறைகளில் 150க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். விளம்பர பலகை,அனைவருக்கும் சாப்பாடுச் செலவு, ஒலிபெருக்கி செலவு என ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு முகாமிற்கு செலவு ஆகிறது.துறை சார்பாக ஒதுக்கும் பணம் 30 ஆயிரம். மீதப் பணத்திற்கு ஊராட்சி செயலர் படும்பாடு வேதனையிலும் வேதனை தலைவா..
அப்படியெனில், ஊராட்சி செயலாளர்கள் படும்வேதனை என்று தலைப்பை சொல்லும் ஒற்றரே…
உண்மை தான் தலைவா…மீதப் பணத்திற்கு ஏதோ ஒரு வகையில் பில் போடவேண்டும். அந்த பில் பாஸாவதற்கு மண்டல துணை வட்டார அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனி கவனிப்பு செய்யவேண்டும்.
வருட இறுதியில் வரவு செலவு கணக்கில் சரி செய்வது எப்படி ஒற்றரே…
கொடுமை தலைவா…தணிக்கை நேரத்தில் அதனை சரி செய்ய அதற்கும் தனி கவனிப்பு செய்யவேண்டும். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்வால் கதிகலங்கி உள்ளனர் ஊராட்சி செயலாளர்கள் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.