தமிழ்நாடு முழுவதும் துப்புரவு பணி பற்றிய முனகல் கேட்கிறது ஒற்றரே…
ஆமாம் தலைவா…நான் சேகரித்து வந்த தகவலும் அதை பற்றியது தான். காலை ஆறு மணிக்கே துப்புரவு பணி ஆரப்பித்து பத்து மணிக்குள் பணி நிறைவுற்ற புகைப்படங்களை பதிவிட உயர் அதிகாரிகள் உத்தரவு விட்டுள்ளனராம்.
கிராமப்புறங்களில் ஆறு மணிக்கே துப்புரவு பணி தொடங்கிட முடிவுமா ஒற்றரே…
அதில் கூட பிரச்சனை இல்லையாம். மக்கும் குப்பை,மக்கா குப்பைகளை தரம்பிரித்து,குறிப்பாக…பிளாஸ்டிக் பொருட்களை தனித்து பிரித்து சேகரித்த படங்களை பத்து மணிக்குள் பதிவிட வேண்டுமாம்.இதில் தான் பல சிக்கல் உள்ளதாம்.
என்னென்ன சிக்கல்கள் ஒற்றரே…
குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டிகளில் பத்து சதவீத வண்டிகள் தான் பயன்பாட்டில் உள்ளதாம். மீதம் 90 சதவீத வண்டிகள் ரிப்பேர் ஆகி நிற்கிறது. சப்ளை செய்த நிறுவனம் பழுது நீக்கி தருவதில்லை என்பது ஒரு சிக்கல்.போதிய வாகன வசதி இல்லாமல் குப்பைகளை எப்படி சேகரிப்பது என புலம்புகிறார்கள்.
அது சரிதானே ஒற்றரே…அடுத்த சிக்கல்.
பெரும்பாலான ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாதது மிக முக்கிய சிக்கல். இருக்கும் பணியாளர்களுக்கும் பணிக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்பது அடுத்த சிக்கல்.
இப்படி அடிப்படை சிக்கல்களை சரி செய்ய அதிகாரிகளின் நடவடிக்கை என்ன ஒற்றரே…
பழுதான பேட்டரி வண்டிகளை சரி செய்வதற்கு பெரிய அளவில் பொருளாதாரம் தேவைப்படுகிறது. வண்டிகளை சப்ளை செய்த நிறுவனமும் கண்டுகொள்வதில்லை.இதற்கான தீர்வு உச்ச அதிகாரிகளின் கையில் தான் உள்ளது தலைவா…
வெயில் காலத்தில் மழை பெய்யும் பருவம் மாறிய நிலை தென்மாவட்டங்களில. காணப்படுகிறது. இதனால் நோய் பரவல் வரலாம் என்ற அச்சம் வேற உண்டாகிறது ஒற்றரே…
ஆமாம் தலைவா…குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். அதே வேளையில் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரிசெய்வதும் முக்கியம் என கூறி மறைந்தார் ஒற்றர்.