என்ன ஒற்றரே…பரபரப்பான செய்தியா.
ஆமாம் தலைவா…தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம்.
ஊரக வளர்ச்சித்துறை ஊழியரா ஒற்றரே…
தலைமை செயலக பணியில் இருந்து ஊரக வளர்ச்சி துறைக்கு மாறி மூன்றாண்டுகள் பணியாற்ற வந்தவர் அவர்.
என்ன தான் செய்கிறார் ஒற்றரே…
தொழிற்சாலை அதிகம் உள்ள மாவட்டம். தான் பணிபுரியும் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொழிற்சாலைகளுக்கு திடீர் விசிட் அடிப்பது.பல குற்றச்சாட்டுகள் அடுக்குவது,சுவீட் பாக்ஸ்களை பெற்றுக்கொள்வது என கலக்குகிறாராம் தலைவா…
ஓன்றிய அதிகாரி என்ன செய்கிறார் ஒற்றரே…
அமைச்சரின் உறவினர் தான் என்று அனைவரையும் மிரட்டி வைத்ததுள்ளாராம்.பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி விவாதித்து வருகிறார்களாம். விரைவில் லஞ்ச ஒழிப்பு துறையை நாட இருப்பதாக கூறுகிறார்கள் தலைவா…
அவர்கள் சொல்வது உண்மையெனில் நடவடிக்கை தேவை தான்.அவர் யார் ஒற்றரே…
மறைமுகமாக ஒரு தகவல். அவர் இங்கிலாந்து மன்னரின் பெயரை கொண்டவராம்.இவரை பற்றி விசாரித்து துறைரீதியாக நடவடிக்கை எடுத்து,அமைச்சருக்கு கெட்ட பெயர் வராமல் தடுக்க வேண்டும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.