உயிர் காக்க உதவிய கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர்

பொதுமக்கள் பாராட்டு

கொடைக்கானல் இன்பச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலா வேன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கும்பறையூர் பிரிவு அருகே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர்.இவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்த அதே நேரத்தில், தனது காரில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி பிரதீப் ராஜமாணிக்கம், விபத்தைக் கண்டதும் உடனடியாக தனது காரை நிறுத்தி உதவிக்கு விரைந்தார். அவர் உடனடியாக தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கும், 108 ஆம்புலன்ஸிற்கும் தகவல் கொடுத்ததுடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் விபத்து குறித்துத் தகவல் தெரிவித்தார்.

மேலும், படுகாயமடைந்த நான்கு நபர்களைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார். ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட மற்ற காயமடைந்த பயணிகளையும் விவரம் அறிந்து முதலுதவி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். காயமடைந்த நபர்கள் அனைவரும் தேனி கானா விளக்கு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரதீப் ராஜமாணிக்கம், விபத்தில் சிக்கியவர்களுக்கு மனிதநேயத்துடன் உடனடியாகச் சென்று மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்த இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது துரித நடவடிக்கையும், மனிதநேயமும் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Also Read  சித்தர்கள்நத்தம் ஊராட்சி - திண்டுக்கல் மாவட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நமது இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.