சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் – ஒன்றியங்களில் குடும்பத்தினர் – ஒற்றர் ஓலை

என்ன செய்தி ஒற்றரே…

தலைவா…ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தி.

ஆமாம் ஒற்றரே…தினசரி ஊடகங்களில் தினசரி ராசிபலன் செய்தி போல ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்தை பற்றி செய்தி வந்து கொண்டே இருக்கிறதே..

ஆமாம் தலைவா…நான் சொல்ல வருவது புதிய தகவல்.

என்ன தகவல் ஒற்றரே…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கூட சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் கொண்டாட போகிறார்களாம் தலைவா..ஊராட்சி செயலாளர்களின் குடும்பத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தங்களது குழந்தைகள் மற்றும் உறவினர்களோடு பொங்கல் வைக்கும் போராட்டத்தை செய்ய இருப்பதாக தகவல்..

பரபரப்பான செய்தியாக உள்ளதே ஒற்றரே..

ஆமாம் தலைவா..தங்கள் கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்களின் போராட்டத்தில் தாங்களும் பங்கெடுக்க அந்தந்த குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்.

ஒற்றரே…அதுமட்டும் நடந்தால், இந்த பொங்கல் போராட்ட பொங்கலாக மாறிவிடுமே.

ஆமாம்..தலைவா. இந்த ஓய்வூதிய போராட்டத்தில் ஊராட்சி செயலாளர்களின் குடும்பங்களும் பங்கு கொள்ள முடிவெடுத்து இருப்பது பரபரப்பை அதிகபடுத்தி உள்ளது.

உண்மை தான் ஒற்றரே..ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்து வருகிறது.ஆளும்அரசு உனடியாக முடிவெடுக்க வேண்டியது மிக அவசரம்.

Also Read  திட்ட இயக்குநர்களுக்கு மூன்றாண்டு இடமாறுதல் - ஒற்றர் ஓலை

சரியாக சொன்னீர்கள் தலைவா… பொங்கலுக்குள் நல்ல முடிவை அரசு எடுப்பது அவசியம். இல்லையெனில், வாக்கு அரசியலில் பெரும் சரிவை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.