ஊராட்சி ஒன்றியத்தின் அதிகாரம் என்ன? அது, மக்களிடம் எவ்வித வரியை வசூலிக்கும்?

ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்தான் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளும் இயங்குகின்றன. இது, 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டன.

கிராம ஊராட்சிகள் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. பஞ்சாயத்து ஒன்றியங்கள் எவ்வித வரியையும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்க இயலாது. பஞ்சாயத்து ஒன்றியப் பகுதிகளில், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கத் தேவையான நிதிக்கு, தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கும் மானியத் தொகைகளை, தமிழ்நாடு அரசின் மாநில நிதிக் குழு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு வழங்குகிறது.

Also Read  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அனைத்து பணியாளர்கள் சங்கம்

பஞ்சாயத்து ஒன்றியக் குழுவிற்கு, ஒரு பணியை நிறைவேற்ற, அதிகபட்சமாக ரூபாய் பத்து லட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்துகொள்ள அதிகாரம் உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை. ரூபாய் 10 லட்சம் முதல் 50 லட்சம் முடிய செலவினங்களுக்கு, மாவட்ட ஆட்சியரியன் அனுமதியும், 50 லட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனரின் அனுமதி தேவை. இருப்பினும், இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்ட ஒதுக்கீடு நிதிகளை செலவிட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்.