துணைத்தலைவர், செயலாளர் மோதல் – பெரியபாளையம் அருகே பரபரப்பு

பெரியபாளையம் அருகே கூட்டுறவு சங்கத்தில், செயலாளருடன் ஏற்பட்ட மோதலால், துணைத்தலைவர் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தை பூட்டி சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே மெய்யூர் கிராமத்தில் ஜெஜெ 601 என்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில், கூட்டுறவு சங்க இயக்குனர்களாக அதிமுகவை சேர்ந்தவர்கள் 7 பேரும், திமுகவை சேர்ந்த 2 பேரும், மா.கம்யூ. மற்றும் பிஜேபியை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கூட்டுறவு சங்க தலைவராக அதிமுகவை சேர்ந்த சிவராமன், துணைத்தலைவராக நிஷாநந்தினி மதன்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மாதம் கூட்டுறவு சங்க தலைவர் சிவராமன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். தற்போது, தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், 3ம் தேதியான நேற்று கூட்டுறவு சங்க இயக்குனர்களுக்கான கூட்டம் நடைபெறும் என அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு அதிமுகவை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் மட்டுமே வந்தனர். திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபியை சேர்ந்தவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.
அப்போது, ‘துணைத்தலைவர் தீர்மானம் நிறைவேற்ற செயலாளரிடம் தீர்மான புத்தகத்தை கேட்டுள்ளார்.

ஆனால், செயலாளர் ஏழுமலை 3ல் ஒரு பங்கு மெஜாரிட்டி இருந்தால்தான் புத்தகத்தை தரமுடியும்’ என்றார். இதையறிந்த துணைத்தலைவர் மற்றும் அவருடன் இருந்த இயக்குனர்கள், செயலாளரிடம் மெஜாரிட்டி நிருபிக்கத்தான் 3ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் தேவை. கூட்டம் நடத்துவதற்கு தேவையில்லை. துணைத்தலைவருக்கே பொறுப்பு வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், துணைத்தலைவர் மற்றும் அவருடன் வந்த உறுப்பினர்கள் செயலாளரை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி விட்டு கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்டனர். பின்னர், அந்த சாவியை திருவள்ளூர் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க சென்றனர். இதனால், மெய்யூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read  கீழ்பாப்பாம்பாடி ஊராட்சி - விழுப்புரம் மாவட்டம்