2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இளம்பெண்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் 2 கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான இடைத்தேர்தல் மசினகுடி 4, சேரங்கோடு 11 ஆகிய வார்டுகளிலும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு உறுப்பினர் தேர்வுக்கான இடைத்தேர்தலும் கடந்த 9ம் தேதி நடைபெற்று முடிந்தன.

இந்த தேர்தலில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் (பெண்கள்) மொத்தம் உள்ள 451 வாக்குகளில் 287 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 3 செல்லாத வாக்குகள். திமுக ஆதரவுடன் திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட நதியா என்ற 22 வயதான இளம் பட்டதாரி பெண்,112 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திலகவதி 110 வாக்குகள் பெற்று 2 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மசினகுடி 4வது வார்டு குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உத்தமன் 1,249வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேரங்கோடு 11 வார்டு குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பாரதி 1,706 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

Also Read  பர்லியார் - நீலகிரி மாவட்டம்