சார், மேடம் சொற்களுக்கு தடை விதித்த கிராம பஞ்சாயத்து

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ‘சார்’, ‘மேடம்’ போன்ற வார்த்தைகளுக்கு தடை விதித்துள்ளது. மாத்தூரில் கடந்த மாதம் நடந்த கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு இதுகுறித்த அறிவிப்பும், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கால பயன்பாட்டு வார்த்தைகளான ‘சார்’, ‘மேடம்’ ஆகியவற்றிற்குப் பதிலாக மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்த மொழியியல் துறையிடம் பரிந்துரையும் கேட்டுள்ளனர்.
சரியான மாற்று வார்த்தைகள் கிடைக்கும்வரை பெயர் சொல்லியோ, அவர்களின் பதவியைச் சொல்லியோ அழைக்கலாம் என்றும், அரசு அலுவல் கடிதங்களிலும் சார், மேடம் போன்ற வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்றும் முடிவெடுத்துள்ளனர். அரசு சேவை தொடர்பாக விண்ணப்பங்களில் கீழ்ப்படிகிறேன், தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக வேண்டுகிறேன், விரும்புகிறேன் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் முடிவெடுத்துள்ளனர். அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் விதமான இம்முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Also Read  அஜித் படத்தில் களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகர்