கொரனா பேரிடர் பணிகளில் விடுமுறை நாட்களில் ஊரகவளர்ச்சித்துறையை மட்டும் ஈடுபடுத்துவதா?-மாநில செயலாளர் கேள்வி!

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…

கடந்த 02 கொரனா பேரலை பணிகளில் ஊரகவளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்..100 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கொரனாவை கட்டுப்படுத்தியுள்ளோம்..

கொரனாவின் ஒவ்வொரு அலைகளின் போதும் கிருமிநாசினி தெளிப்பு பணி,மாஸ்க் அபராத வசூல்,கோவிட் முகாம்கள் ஏற்பாட்டு பணி,நோயாளர்களை கண்டறிதல்,கண்காணித்தல்,தடுப்புவேலிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை இடைவிடாது இன்றுவரை செய்துவருகின்றோம்..

இதுவரை நடைபெற்றுள்ள 18 மெகா தடுப்பூசி முகாம்களை வெற்றிகரமாக நடத்திய பெருமை ஊரகவளர்ச்சித்துறைக்கே உண்டு..மேலும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தும்போதெல்லாம் அளப்பரிய வகையில் நேரம் காலம் பாராது உழைத்து வருகின்றோம்.

அரசு விடுமுறை அறிவித்தாலும் ஊரகவளர்ச்சித்துறைக்கு மட்டும் அந்த விடுமுறை பொருந்தாத நிலையாக மாவட்ட நிர்வாகங்களால் மாற்றப்பட்டு வருகிறது..மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சில இடங்களில் திங்கள் முதல் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் மட்டும் கோவிட் பணிகளில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நேரத்தில் பேரிடர் மேலாண்மை துறையில் பணியாற்றிவரும் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு விடுப்பு அளிப்பதும்,அவர்களுக்கு அவசர தேவையின்றி பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலரே உத்தரவிடுவதும் வியப்பளிப்பதாக உள்ளது.

Also Read  என்னாச்சு சம்பளம்- வருத்தத்துடன் ஜான்போஸ்கோ பிரகாஷ் எழுதிய கடிதம்

துறையிலேயே பேரிடர் மேலாண்மையை கொண்டுள்ளவர்கள் பேரிடர் பணிகளில் ஈடுபடுத்தப்படாமல் சில மாவட்ட ஆட்சியர்களால் காப்பாற்றப்படுவதும்,ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்களை மட்டும் நவீன கொத்தடிமைகளாக மாற்ற நினைப்பதும் ஏன்?

வருவாய்துறை பணியாளர்களுக்கு உத்தரவிட்டு வேலை வாங்க தயங்கும் மாவட்ட நிர்வாகங்கள்,தொடர்ச்சியாக உறக்கமின்றி பணியாற்றிவரும் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்களை மட்டும் நிர்பந்தித்து நிந்திப்பது ஏன்?

இதே நிலை தொடர்ந்தால் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையை முழுமையாக ஈடுபடுத்தும் வரை ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மாநில அளவில் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.எனவே பாகுபாடற்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறைவான ஊதியம் பெறும் இவர்களின் கோரிக்கை நியாயம்தானே?