செய்யாற்றில் தொடர் மணல் கொள்ளை – கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சேத்துப்பட்டு அருகே செய்யாற்று படுகையில் இரவு, பகலாக நடக்கும் மணல் கொள்ளை குறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி கிராமம் வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள சில இடங்களில் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் கிராமம் வழியே செல்லும் இந்த செய்யாற்று படுகையையொட்டி விவசாயம் செய்து வருகிறோம். சமீபத்தில் பெய்த தொடர்மழையால் ஆற்றில் வெள்ளம் வந்து, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. கிணறுகளிலும் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளோம். ஆனால், சிலர் இரவு நேரங்களில் ஆற்றுப்படுகையில் இறங்கி மணலை திருடி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.‌

குறிப்பாக, ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள மேட்டுக்குடிசை, சாணார்தோப்பு மற்றும் ஓதலவாடி பகுதிகளில் இரவு நேரங்களில் மாட்டுவண்டியுடன் இறங்கும் மணல் கொள்ளையர்கள், அங்குள்ள வளமான மணலை திருடி அருேக ஏதாவது ஒரு இடத்தில் பதுக்கி வைக்கின்றனர். பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மணலை வெளியிடங்களுக்கு விற்று வருகின்றனர். இங்கிருந்து செல்லும் கொள்ளை மணல் அருகிலுள்ள தேவிகாபுரம், போளூர், சதுப்பேரி மற்றும் களம்பூர் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மணல் கடத்தல் குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும், அவர்கள் வருவதற்குள் கொள்ளையர்களுக்கு தகவல் தெரிந்து தப்பித்து விடுகின்றனர்.

Also Read  திருவண்ணாமலை தீப திருவிழா - வெளியூர் பக்தர்களுக்கு தடை

சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றுப்படுகையில் சென்ற வெள்ளத்தால், வளமான மணல் குவியல் ஆற்றில் தங்கியுள்ளது. இதனை அவர்கள் விற்று பணமாக்க இரவு, பகலாக கொள்ளையடித்து வருகின்றனர். ஆற்று மணலை தொடர்ந்து சுரண்டி வந்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. மணல் வளம் காக்கவும், விவசாயத்தை காக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.