தூய்மையான ஊராட்சி – சோமம்பட்டி கிராமசபையில் மக்கள் உறுதி

சேலம் மாவட்டம்

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளிலும் மேதின கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

சோமம்பட்டி கிராம சபை கூட்டத்தில், சுகாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சோமம்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். வேளாண்மை உதவி இயக்குநர் P.கலாசித்ரா, சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் தாரணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரேசன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன், பற்றாளர் சங்கீதா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பெருந்திரளாக பங்கேற்ற பொது மக்கள், கிராமத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த குப்பையை தரம்பிரித்து துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்றனர்.

ஓராண்டுக்கான வரவு செலவு கணக்குகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நிதிநிலை அறிக்கை குறித்த தட்டி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பழுதடைந்த துணை சுகாதார நிலையத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டடம் அமைக்க வேண்டும். சமுதாயக் கூடம் அமைக்கவும், சோமம்பட்டி ஏரியில் புதர்மண்டி கிடக்கும் சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்திவிட்டு, பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.

ஆதிதிராவிடர் காலணிக்கு பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Also Read  ஆடையூர் ஊராட்சி - சேலம் மாவட்டம்