சுகாதாரம் காப்போம்! சுகவாழ்வு வாழ்வோம்!

நம் முன்னோர்களின் ஆயுள்காலம் அதிகம். தற்போதும் ‘பெருசுகள்’ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம், சத்தான இயற்கை உணவு வகைகள்.

குறிப்பாக, கம்பு, சோளம், ராகி போன்ற தினை வகை உணவுகளை அதிகம் உண்டு இருப்பார்கள். அரிசி சாதம் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறையோதான் உண்டு இருப்பார்கள்.

ஆனால், இன்றைய நாகரிக உலகில் துரித உணவுகள், பீட்சா, பர்க்கர், தினமும் அரிசி சாதத்தை உண்டு வருகிறோம். துரித உணவுகளில் ரசாயனம் அதிகமாக கலக்கப்படுவதால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டு, மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறோம்.

அரிசியில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அன்றைய கால கட்டத்தில் நோயில்லாத செல்வத்தை பெற இயற்கையை நேசித்தார்கள். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள்.

இன்றைய கால கட்டத்தில், வாகனங்களின் நச்சுப் புகையால் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.

நோயற்ற வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும். சுற்றுப்புற சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்துவது.

அதாவது, கைகளை நன்றாகக் கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா.? என்ற எண்ணம் சிலருக்கு தோன்றலாம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.

Also Read  ஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா - செய்வது எப்படி?

குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்கின்றன.

இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம், அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே.

‘ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ்’ என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு, உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.

ஆகவே, காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.

மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது. எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்புகூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது. வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.

குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

Also Read  மாரடைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சினையை போக்கும் மருத மர பட்டை டீ - செய்வது எப்படி?

அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
முன்னோர்கள் வீட்டு முற்றத்தைக்கூட பராமரித்த முறையும், ஆற்றில் இறங்கி மூழ்கிக்குளித்த நெறியும் அறிவியல்சார்ந்த சுத்தமின்றி வேறென்ன.!

எனவே, இளைய தலைமுறையினர் இத்தகு வழிமுறைகளை கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்கா வண்ணம், ஆரோக்கியமாய் வாழலாம்.

‘கைசுத்தம்’ தானே
வீட்டுக்கும் – நம்
நாட்டுக்கும்
உயிருக்கும் நலம்.!