ஒரு ஊராட்சி செயலரின் உள்ளக்குமுறல்

உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) மதுரை அவர்களுக்கு ஊராட்சி செயலரின் மனம் திறந்த மடல்…

அய்யா…
வணக்கம்..
தாங்கள் நலமாக உள்ளதை அறிந்து மகிழ்ந்தோம்…
நாங்கள் நலமாக இல்லை…

நீங்க நல்லா இருக்கீங்களா? என எங்களை நோக்கி யாரேனும் கேட்டால் அந்த கேள்வியை எப்படி எதிர்கொள்வது என்பதே எங்களுக்கு தெரியவில்லை…

நல்லா இருக்கீங்களா என அக்கறையாக கேட்கிற ஒருத்தரிடம் எங்க உடலும், உள்ளமும், வாழ்க்கையும் நாசமாக போயிட்டு இருக்கிறதை எப்படிங்கய்யா சொல்றது?

அய்யா..
நீங்க நிறைய படிச்சவரு
பெரிய அனுபவசாலி…
உங்களுக்கு கண்டிப்பாக இந்த திருக்குறள் தெரிந்திருக்கும்…

மயிலிறகு எடை குறைந்தது தான் எனினும் அதையே அளவுக்கு அதிகமாக வண்டியில ஏற்றினால் பாரம் தாங்காமல் வண்டி அச்சு முறிஞ்சிடும்னு அய்யன்
திருவள்ளுவர் சொல்லிருக்காரு….

குருவித் தலையில பனங்காய்னு ஒரு சொலவடை இருக்குங்களய்யா அது மாதிரி…இல்லையில்லை குருவித் தலையில பாறாங்கல்லை வைச்ச மாதிரியிலங்கய்யா ஊராட்சி செயலாளர்கள் மீது நீங்க நாள் தோறும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம வேலைப் பளு பாரத்தை ஏத்தி கொடுமைபடுத்துரிங்க…

நாங்களும் அய்யா சொல்லை தட்டாம ஓடி பாக்கிறோம்…ஆடி பாக்கிறோம் இருந்தாலும் அய்யா உங்களை திருப்தி படுத்த முடியலிங்கய்யா…

அய்யா முந்தாநாளு நம்ம மாண்புமிகு முதல்வர் அவர்கள் ரொம்ப அருமையா ஒரு பேட்டி கொடுத்தாரு கேட்டிங்களாய்யா…

அதாவது அவரு சொன்னாருங்கய்யா..
முன்களப் பணியாளர்கள் நீண்ட நாட்களாக கடுமையாக வேலை செய்து வருகிறார்கள்..விரைவில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்…இனியும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாதுனு சொன்னாருங்கய்யா..

அவருக்கிருக்கிற அக்கறை உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கானு யோசிங்கய்யா…

கோவிட்னு ஆரம்பிச்ச நாளிலிருந்து இந்த ஒண்ணரை வருசமா ஊராட்சி செயலர்கள் மனமும் உடலும் புண்ணாகி வேலை வேலைனு ஓடிக்கிட்டுதான் இருக்கிறோம்..

ஓண்ணா
ரெண்டா
எதை சொல்றது அவ்வளவு நெருக்கடி…
தினந்தோறும் சவுக்கடி…

இங்க நம்ம டிபார்ட்மெண்ட்ல கண்காணிப்புக்கு நிறைய பேர் இருக்காங்க..ஆனால் களத்தில சீரழியிறது நாங்களும் தூய்மை பணியாளர்களும் மட்டும்தாங்கய்யா..

மாநிலத்தில் பல இடங்களில் தொற்றுக்குள்ளாகி செத்துப் போன ஊராட்சி செயலர்களுக்கு ஈமச்சடங்கு செலவு காசு கூட இல்லைங்கய்யா..
ஒரு பைசா நிவாரணமும் இன்னும் வல்லங்கய்யா…

அதப்பத்தி உங்களுக்கு என்னங்கய்யா கவலை?? நீங்க நடத்துங்கய்யா உங்க துக்ளக் தர்பாரை….

இப்ப ஒரு சர்வே எடுக்கணும் சொன்னிங்க….அதற்கான பாரத்தை கொடுத்த மறுநாளே ஆயிரக்கணக்கான வீடுகளை இரண்டு நாட்களில் சர்வே எடுத்து முடிக்கனும் இல்லையின்னா தொலைச்சுபுடுவோம்…சஸ்பெண்ட் பண்ணிப்பூடுவோம்னு மெரட்டறிங்களே கொஞ்சமாவது நடைமுறை சாத்தியங்களை யோசிக்க வேணாமாங்கய்யா?

லாக்டவுன் காலத்தில ஒரு வீட்டு கதவை தட்டி 3 பாரத்தையும் பூர்த்தி செய்யிறதுக்கு குறைஞ்சது 20 நிமிடம் ஆகுது…சர்வே எடுக்க ஆளும் கிடைக்கல…

ஈஸியா சொல்றீங்க…மகளிர் குழு இருக்கு VPRC இருக்குனு …சர்வே எடுக்குறவங்களுக்கு சம்பளம் மகளிர் குழுவிலிருந்து வரும்னு சொல்றீங்க…

இந்த மகளிர் குழு VPRC ஏட்டளவில் தான் இயங்குதுனு உங்களுக்கு தெரியாதா? எந்த சர்வே எடுத்ததுக்கு எப்ப சம்பளம் தந்திருக்கீங்க…இப்ப சம்பளம் கொடுத்தாலும் உயிர் பயத்தில யாரும் சர்வே எடுக்க முன்வராமல் மொத்த சுமையும் ஊ.செ தலையில விழுந்திருக்கு….

எதுக்கு இந்த சர்வே…
மக்கள் பிரதிநிதிகளான வார்டு உறுப்பினர்களை வைத்து தினசரி அவர்களது வார்டுக்குள்ள அறிகுறி இருக்கிறவங்களை கண்டுபிடிச்சு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை கொடுத்திருலாமே!

எதுக்கு ஒரு நெருக்கடியான கால கட்டத்தில இப்படி பேப்பர் வேலை…காத சுத்தி மூக்க தொடுறீங்கனு கேட்டா இல்லை இது CT மினிஸ்டரோட உத்தரவுனு சொல்றீங்க…

Also Read  உழைப்பை ஊனமாக்குகிறதா நூறு நாள் வேலை?

இப்ப எதுக்கெடுத்தாலும் CT மினிஸ்டர் பெயரே சொல்றீங்க…
இப்படித்தான் கடந்த முறை உள்ளாட்சித் துறை அமைச்சர் பெயரை சொல்லி ப்ளீச்சிங் பவுடர்,LED லைட்டு,குப்பைத் தொட்டி, குப்பை வண்டி , பாரம் பதிவேடுனு வியாபாரம் நடத்திகிட்டு இருந்தீங்க…

இப்ப CT மினிஸ்டர் பெயரை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க…
இந்த கணக்கெடுப்பு பயனற்றதுனு துறையின் மாவட்ட தலைமையாக இருக்கிற நீங்க அமைச்சருக்கு சொல்லியிருக்க வேண்டாமா??

இப்போ ரெண்டு நாட்களாக அறிகுறி இருக்கிறவங்க பெயர்களை ஹெல்த் டிபார்ட்மெண்ட்க்கும், யூனியன் ஆபீஸ்க்கும் சொன்னோம்…ஒரு பாலோ அப் இல்லையே…
அவங்கள யாரும் வந்து பார்க்கல..
ஏன் ஒரு பாரசிட்டமல் மாத்திரை கூட கொடுக்கலையே…
பின்ன சர்வே பேப்பர்ல எழுதி வைத்து என்ன செய்ய…சர்வே பேப்பர்லையே கொரனோவை ஒழிச்சிருலாமா?

அய்யா…
கொரனோ எனும் கொடிய தொற்றை அழிக்க இப்போதைய தேவை அறிவியல் பூர்வமான அணுகுமுறை
அதை விடுத்து…
அறிவியல்பூர்வமாக வைரஸ்க்கு எதிராக போராட வேண்டிய நேரத்தில அட்டை கத்தியை வைச்சு போராடினா கிராமத்துல மக்கள் அதிருப்தியாக மாட்டாங்களா?

இதுல அமைச்சர் பெயரை வேற இழுக்கிறீங்களே…எங்க ஊரூல ஒருத்தரு சொன்னாரு…
ஏப்பா வைகை அணையை தெர்மாகோல் வைச்சு மறைக்க முயற்சி செஞ்சாருன்னு அமைச்சர் செல்லூர் ராஜை எல்லோரும் கிண்டல் செஞ்சீங்களே அதுக்கும் இப்ப நீங்க பண்ணிக்கிட்டிருக்கிறதுக்கும் என்னய்யா வித்தியாசம்னு…

நேத்து ஒரு படி மேலே போயி வயர்லெஸ்ல CM சொன்ன சர்வேனு வேற சொல்றீங்க…அறிகுறி இருக்கிறவங்களை மிகச் சரியாக வீடு வீடாக கண்டறிந்து தனிமைப்படுத்தி நோய் தொற்று பரவலை தடுக்க தீவிரமா பணியாற்றுங்கனு முதல்வர் சொன்னா நீங்க 3 படிவத்தை கொடுத்து ஆயிரக்கணக்கான வீடுகளை இன்னைக்கே சர்வே செஞ்சாகனும்னு சொல்றீங்களே இது நியாயமா?
ஏதோ சர்வே எடுத்தோம்ங்ற பேர்ல காமா சோமானு செயல்பட்டா அது அரசுக்கு நல்ல பெயர் வாங்கி தருமா?

பத்தாண்டு கழித்து தி.மு.க ஆட்சி…
நாங்களாம் ஆசைப்பட்ட ஆட்சி..
பல தடைகளை தாண்டி அய்யா ஸ்டாலின் முதலமைச்சர்…
நீண்ட அரசியல் வாழ்வில் இப்ப தான் நம்ம ஊருக்கார் CT மினிஸ்டர்….
இப்படிபட்ட சூழலில் உங்க நடவடிக்கை அவர்களுக்கும் அரசுக்கும் பயனளிக்கிற மாதிரி இருக்க வேண்டாமா??

ப்ளீச்சிங் பவுடரை போட்டே கொரனாவை கொல்லாம்னு தினசரி அதை செய்ய சொல்லி போட்டோ போட சொல்றீங்களே அதுக்கு பதிலா ஐம்பது தடுப்பு மருந்து டப்பாக்களை பஞ்சாயத்து தலைவர் வார்டு மெம்பர்கிட்ட கொடுத்துப் பாருங்க..
அவங்க வார்டுக்குள்ள அறிகுறி உள்ளவங்கிட்ட அதை கொடுத்து அவங்கள கண்காணித்து நோய் தொற்று பரவலை கட்டுபடுத்திடுவாங்க….மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களை மட்டும் உரிய அலுவலர்களுக்கு தகவல் சொல்லி நடவடிக்கை எடுத்திருவாங்க….
அதை விட்டுட்டு ப்ளீச்சிங் பவுடரையும் சுண்ணாம்பையும் ரோடு பூராம் கொட்டி வைச்சு வீண் விரயம் செஞ்சு அதை போட்டோ வேற போட்டி போட்டு போட சொன்னா…?
அய்யா இது நாங்க கனவு கண்ட ஆட்சிக்கு அவப் பெயரை அல்லவா தேடித் தரும்….

இதைத் தானே முதல் அலையில செஞ்சீங்க…இப்ப இரண்டாவது அலையிலையும் இதையே செஞ்சா மூணாவது அலை மட்டுமல்ல பல அலைகள் வந்து தான ஆகும்?

சரி அய்யா சொல்றீங்கனு..
நாய் படாதபாடு பட்டு சர்வே எடுத்தா நேத்து சொல்றீங்க….
3 வருசத்துக்கு முன்னாடி சத்துணவு/அங்கன்வாடி பணியாளரும் எடுத்த சர்வே கணக்கும் நாங்க எடுத்த கணக்கும் ஒத்துப் போகலினு வேற சொல்றீங்க…

Also Read  பினாமி பஞ்சாயத்து தலைவர்கள்

அவங்க என்ன கணக்கெடுத்தாங்களோ ?
எதுக்கு எடுத்தாங்களோ?
குடும்பத்தை எடுத்தாங்களா?
குழந்தைகளை எடுத்தாங்களா?
வீட்டை எடுத்தாங்களா?
எங்களுக்கு என்ன தெரியும்?

எங்களை நம்பலேனா அவங்கள வைச்சே நீங்க எடுத்திருக்கலாமே?
இல்லே…
இப்ப இந்த கணக்கை நேர் செய்றது ரொம்ப அவசியமா?
அதுக்கு ஒரு பாரத்தை அடிச்சு இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையே அதை நேர் செஞ்சாகனும்னு சொல்றீங்களே இதுக்கு வேணா தனியா ஒரு ஆடிட்டரை வேணா போடுங்களேன்…

நேத்து ஒரு ஊராட்சி செயலாளர் அவர் மனக்கஷ்டத்தை வாட்ஸ் அப்ல பதிவா போடுறாரு…அதுக்கு நீங்க வேற வேலைக்கு போங்களேனு ஈஸியா சிபாரிசு செய்றீங்களே…
ஒவ்வொரு ஊ.செயலரும் ஒண்ணரை வருஷமாக செத்திக்கிட்டு இருக்கும் போது ரொம்ப அலட்சியமாக வேற வேலைக்கு போன்னு சொல்றீங்களே இதயம் இருப்பவர் செய்யும் செயலா இது??

நீங்கள் மட்டும் தான் மதுரையில மக்களை காக்குற தியாகி மாதிரியும் மத்தவனெல்லாம் வேலையே செய்யிரது இல்லைனு பேசினிங்கனா இது அடுக்குமா…

அய்யா…
எந்த நிமிடத்திலும் தொற்று எங்களை வீழ்த்தும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும்…எந்த நிமிடத்திலும் எங்க குடும்பம் நடுத் தெருக்கு வந்துரும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும்…
அதெல்லாம் தெரிஞ்சு தான் தொற்றுக் கெதிராக நாங்க மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம்…

அப்படி நாங்க உயிரோட இல்லாது போகப் போகிற சூழல் வரும் போது வேற வேலைக்கு போன்று அலட்சியமாக சொல்கிற நீங்கள் எல்லாம் எப்படி எங்க குடும்பங்களுக்கு
ஆதரவாக இருக்கப் போறீங்க…

அய்யா…
யாகாவராயினும் நா காக்க..

முதலமைச்சர் கவனத்துக்கு நாங்க கொண்டு போயிருக்கோம் அய்யா…

தமிழ்நாட்டுல இப்ப இருக்கிற ADP,
AD AUDIT எல்லாம் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் தலா பத்து லட்சம் கொடுத்து பல கோ…..யாக ஆக்கிகிட்டவங்க…
இவங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கனும் அய்யா…
இவங்க சொல்ற பாதையில் போனா கிராம பகுதியில மூணாவது அலை நிச்சயம்னு தகவல் சொல்லியிருக்கிறோம் அய்யா…

எங்களுக்கு வேற வழியில்லை…
ஓய்வுக்கான இடைவெளி இன்றி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறோம்…

குறைஞ்ச சம்பளம்னாலும் உழைச்சு கெளரவமாக வாழனும்னு…

சுகாதார பணி, கணக்கெடுப்பு பணி,கபசுர குடிநீர் விநியோகம்,கண்டோமொண்ட் ஜோன் பணி,VCCC பணி , காய்கறி மளிகை விற்பனை ஏற்பாடு, பிணம் எரிக்க சுடுகாடு பணி என நிற்க நேரமில்லாமல் ஓடுகிறவனை…
வேற வேலைக்கு போகச் சொல்றீங்களே…
அப்படி நாங்க போயிட்டா கொரனோ ஓழிஞ்சிரும்னு சொன்னா அதுக்கும் நாங்க ரெடி அய்யா….

மனசாட்சியை தொட்டு பேசுங்கள்…

இன்னும் நீங்க எங்களை ஈடுபடுத்தாத வேலை ஓண்ணு தான் இருக்கு…
அது ஊசி போட பழகி ஊருக்குள்ள ஊசி போடுங்கனு சொல்லாதது மட்டும் தான்…மத்தபடி எல்லாத் துறை வேலையையும் செஞ்சிட்டுத் தான் இருக்கிறோம்…

அழுத்தி சொல்றோம்..
நாங்க மட்டும் தான் வேலை செஞ்சிட்டு இருக்கிறோம்…
மத்தவங்களாம் தாம்தூம் னு உத்தரவு போட்டுக்கிட்டு புள்ளிவிபரங்களை கேட்டு வாங்கி போட்டு பேப்பர்ல கொரனோ வைரஸை கொன்னுகிட்டு இருக்கீங்க…

அது போதாதுன்னு…
எங்களை உயிரோடு கொல்றதுன்னு வேற கிளம்பியிருக்கீங்க….

ஆனாலும் நாங்க தாக்கு பிடிச்சு நின்னிருவோம்…வேலை செஞ்சே பழகுன ஆளுங்கய்யா…எங்க டிசைன் அப்படி….

இப்ப நாங்க எதிர்பார்ப்பதெல்லாம்…

அய்யா…
இதயப்பூர்வமான உங்களது அணுகுமுறையைத் தான் இப்ப நாங்க எதிர்பாக்குறோம்…

எதுவும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிருங்க அய்யா….

இப்படிக்கு,
தங்களது அடிமை
கிராம ஊராட்சி செயலர்….