ஊராட்சியில் மோசடியா… இங்கு புகார் செய்தால் போதும்! உடனே ஆக்‌ஷன்?

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், ஏதேனும் மோசடிகள் இருப்பின் கீழ்க்கண்ட இடங்களில் புகார் அளிக்கலாம். முதலில், இதன் திட்ட அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) புகார் மனு கொடுக்கலாம். மனுவை பெற்ற ஏழு தினங்களுக்குள் அவர் மனு மீது இறுதி முடிவு எடுக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் 7 நாட்களுக்குள் பதில் வர தவறினால் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தண்டனை உண்டு.

வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலில் முடிவின் மீது திருப்தி இல்லை என்றால் அல்லது முடிவின் மீது குறைபாடு உடையவர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரான மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு பெற்ற மாவட்ட ஆட்சியர், ஒரு மாதத்திற்குள் இறுதி முடிவு காண அந்த மனு மீது எடுக்க வேண்டும். மாநில அளவிலான குறை தீர்ப்பு நடுவர் மன்றத்திலும் 100 நாள் வேலை தொடர்பாக யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்.

அவர்கள் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவார்கள் இவ்வாறு நீதி முறைசார்ந்த அமைப்பு 100 நாள் வேலைக்காக ஏற்கனவே சட்டபூர்வமாக உள்ளது. இதுதொடர்பாக தேசிய வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் விதிகள் மிகத்தெளிவாக வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கின்றது. ஆனால் இவை அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

Also Read  ஊராட்சி ஒன்றியத்தின் அதிகாரம் என்ன? அது, மக்களிடம் எவ்வித வரியை வசூலிக்கும்?

இதுதவிர, தகவல் அறியும் சட்டம் மூலம் தனக்கு தேவையான ஆதாரங்களைப் பெறலாம். மக்களின் வரிப் பணம் எங்கெங்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ செலவழிக்கப்படுகிறதோ, அங்கு எல்லாம் கேள்விகளைக் கேட்டு இதன்மூலம் தகவல்களை பெற முடியும். தகவல் அறிவதற்காக நாம் தனியாக எந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டியது இல்லை.

சாதாரணமாக ஒரு வெள்ளைத்தாளில், அனுப்புநர் முகவரியில் நம் தகவல்களைக் குறிப்பிட்டு, பெறுநரில், பொது தகவல் அலுவலர், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005, சம்பந்தப்பட்ட துறையின் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நம்முடைய சந்தேகங்களைக் கேட்டு தகவல் பெறலாம்.

இதற்கு பத்து ரூபாய் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை நாம் அஞ்சல் தலையின் மூலமாகச் செலுத்தலாம். நாம் கடிதம் அனுப்பி 30 நாள்களுக்குள் தகவல் அனுப்பப்படும். ஒருவேளை, அப்படி 30 நாள்களுக்குள் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால், முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அப்படியும் பதில் கிடைக்காதபட்சத்தில், சென்னையிலுள்ள மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான ஆணையத்திலும், டெல்லியிலுள்ள மத்திய ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.