என்ன காரணத்துக்காக ஊராட்சித்தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்?

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலோ அல்லது கீழ்க்கண்ட காரணங்களால் முறைகேடுகள் செய்தாலோ தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205ன் படி கிராம ஊராட்சி தலைவரை பதவியிலிருந்து நீக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம்.
1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி கிராம ஊராட்சி மன்றம் அங்கீகாரம் பெறாமல் செலவு செய்தல்

2. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 110 மற்றும் 111 ல் குறிப்பிட்டுள்ள கடமைகளை செய்ய தவறுதல்

3. தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டிட விதி 1997-ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கட்டிட அனுமதி வழங்குதல், தன்னிச்சையாக மனைப் பிரிவு (Layout) அனுமதி வழங்குதல்

4. அரசாணை எண் – 92, ஊரக வளர்ச்சித்துறை நாள் 26.03.1997 மற்றும் அரசாணை எண் – 146, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை (C4), நாள் 17.08.2007 மற்றும் அரசாணை எண் – 43, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நாள் 21 02.2007-ன்படி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் நிதியினை தவறான முறையில் கையாடல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தல்.

மேலும் பல்வேறு அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு வரி விதித்தல் மற்றும் கட்டணங்களை நிர்ணயித்தல், வசூல் செய்வதில் முறைகேடு செய்து ஊராட்சிக்கு இழப்பினை ஏற்படுத்துதல்

Also Read  இந்தியாவில் முதல்முறையாக இராஜபாளையத்தில் - கொரொனா தடுப்பு

5. அரசாணை எண் – 203, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நாள் 20.12.2007 -ன் படி கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஊராட்சியின் அனுமதி மற்றும் முறையான ஒப்பந்தம் கோரி செய்யாமல் தன்னிச்சையாக பணிமேற்கொண்டு முறைகேடு செய்தல்

6. தமிழ்நாடு அரசு அவ்வப்போது முறைப்படுத்தும் திட்டங்களை நிர்வாக அலுவலர் என்ற முறையில் செயல்படுத்த தவறுதல் அல்லது திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து லாபம் அடைதல்

7. ஊராட்சிக்கு வர வேண்டிய வரவினங்களை தடுத்து சுயலாபம் அடைய, ஊராட்சிக்கு இழப்பினை ஏற்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக கிராம ஊராட்சி தலைவரை பதவியிலிருந்து நீக்கலாம்.