ஓர் ஊராட்சி வளர்ச்சியடைய இதைச் செய்தால் போதும்….

ஓர் ஊராட்சியின் வளர்ச்சி, அந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கையில்தான் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அவர்கள், நினைத்தால், தங்கள் பகுதியை மிகச்சிறப்பான முன்னுதாரண ஊராட்சியாக மாற்றமுடியும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஊராட்சியை வளர்ச்சியடையச் செய்வது என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. முதலில் அனைவரும் தமது கிராமத்திற்கென நல்லதை செய்யத் தொடங்க வேண்டும். ஊராட்சி நிர்வாகம் ஊழலற்ற லஞ்ச லாவண்யம் இல்லாத நிர்வாகமாக இருக்க வேண்டும். முதலில், ஊராட்சித் தலைவர் நேர்மையான முறையில் செயல்பட வேண்டியது அவசியம்.

தலைவரே சரியாக இல்லையெனில், ஊராட்சியின் மற்ற நிர்வாகிகளும் சரியாக இருக்க மாட்டார்கள். இப்படி, சீரான நல்ல நிர்வாகமாக இருந்தால் ஊராட்சி மக்களுக்கு அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். இதன்மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை அவர்களால் நிச்சயம் உயர்த்த முடியும். மேலும், எல்லாவிதமான தேவைகளுக்கும் அரசாங்கத்தைச் சார்ந்திருக்காமல் ஊராட்சியின் நிதியிலிருந்தே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு, முதலில் ஊராட்சி முழுவதும் நூறு சதவிகிதம் வரி வசூல் செய்ய வேண்டும். முழு வரி வசூல் செய்வதுமூலம் தமது சுய நிதியை பெருக்கிக்கொண்டால், எப்போதும் அரசாங்கத்தைச் சார்ந்திருக்கவேண்டிய தேவை ஏற்படாது.

Also Read  ஐந்து உயிர்களை காப்பாற்றிய சிவகங்கை இளைஞர்

இத்துடன், மத்திய-மாநில அரசாங்கங்கள் அளிக்கும் சிறப்புத் திட்டங்களை ஊராட்சித் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடமோ, திட்ட நிர்வாக இயக்குநரிடமோ பேசி பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் அரசு நிதியுதவியும் கிடைக்கும். தவிர, சொந்த ஊராட்சியின் நிதியும் இருக்கும். இதை வைத்துக்கொண்டு எளிதில் ஊராட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு, புதிய திட்டங்களையும் செயல்படுத்தமுடியும். இதோடு, அனைத்து மக்களையும் சாதி மத பேதமில்லாமல் நடத்தினால், கனவு கிராமத்தை அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களாலும் நிச்சயம் உருவாக்க முடியும்.

அதுபோல், சேமித்தல் என்பது ஓர் ஊராட்சிக்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு ஊராட்சியும் செயல்படுத்தும் திட்டங்களைத் தரமான முறையில் செயல்படுத்துதல் வேண்டும். இதனால் அனாவசியமாகச் செலவு செய்வதை தவிர்க்க முடியும். இதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர்கள், மக்களுக்காகச் செயல்பட வேண்டும். இந்த வழிமுறைகளை எல்லா ஊராட்சி மன்றத் தலைவரும் பின்பற்றினால், அந்த ஊராட்சி பின்தங்கி இருக்க வாய்ப்பே இல்லை.