மக்களை மடையர்களாக்கும் பத்திரப் பதிவு மற்றும் வருவாய் துறை

ஒரு சொத்தை தனது உழைப்பில் வாங்கும் ஒருவர் பத்திர பதிவு செய்வதற்கு செல்கிறார். அப்படி ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு, அதே பதிவுத்துறையில் முப்பது வருடத்திற்கும் மேலாக வில்லங்க சான்றிதழை பெறுகிறார்.

அதில், அவர் வாங்கப்போகும் சொத்தின் ஆவணப்படியே அனைத்தும் உள்ளது. வில்லங்கம் எதுவும் இல்லை என்று அதே துறையும் சான்றிதழ் தருகிறது.

பதிவு செய்யும் போது, வருவாய் துறை பட்டாவிற்கு ஆவணத்திற்கும் ஒத்துப்போகவில்லை என்று பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

அந்த சாதாரண மனிதனின் கேள்வி?

நாங்கள் பத்திரப் பதிவுத்துறையை நம்புவதா? வருவாய் துறையை நம்புவதா?

தமிழக அரசின் கீழ் வரும் இரு துறைகளிலும் ஒரே சொத்தை வெவ்வேறு விதமாக பதிவு செய்து வைத்துள்ளனர்.?

வருவாய் பட்டா என்பது வலியவன் நினைத்தால், அடுத்தவன் சொத்தை தன் பெயரில் மாற்றி வைத்துக்கொள்கிறான். அதற்கு வருவாய் துறை துணை போகிறது.

ஐம்பது ஆண்டுகால ஆவணப்படி சொத்துக்கு உரிமையானவன் சொத்தை விற்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இது மாதிரியான சிக்கலை, இரு துறைகளும் இணைந்தே சரி செய்ய வேண்டும்.ஆனால், தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்துள்ள அரசுகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்படுவது இவர்களுக்கு காலம்காலமாக வாக் களித்து வரும் அப்பாவி மக்கள் மட்டுமே.

Also Read  பெருமைகளை இழக்கும் செயல்படாத தலைவி

திராவிட மாடல் என்று மார்தட்டும் இவர்களும், அடிப்படை விசயத்தை கண்டுகொள்ளாது பதிவுத்துறையின் வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என வீண் தம்பட்டம் அடிப்பதை மட்டுமே தலையாய கடமையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

முதலில், பத்திரப் பதிவுத்துறையும், வருவாய் துறையும் இணைந்து செயல்படக் கூடிய வழியை முதலில் பார்க்கட்டும். அதன் பிறகு, திராவிட மாடலை பற்றி தம்பட்டம் அடிக்கட்டும்.

நமது அரசியல் கண்ணாடி இதழில் மாதம் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்ந்து கண்காணித்து, அதில் நடைபெறும் நல்ல விசயங்களையும், நடைபெறும் தவறுகளையும் வரும் அக்டோபர் இதழில் இருந்து தொடர்ந்து பதிவிட உள்ளோம்.அதற்கு, அதிகார வர்க்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளையும் அச்சேற்றுவோம்.