பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் மீண்டும் பதவிக்கு வரமுடியுமா?

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 ன் உட்பிரிவு 1(a) மற்றும் 1( b) ன்படி மாவட்ட ஆட்சியர் தானாகவோ அல்லது ஊராட்சி மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 3ல் 2 பங்கிற்கு குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளிக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் திருப்தியடையும் பட்சத்தில் குறித்த ஒரு தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி ஊராட்சி தலைவரை அறிவிப்பு வாயிலாக கோரலாம்.

உட்பிரிவு 2ன்படி ஊராட்சி தலைவர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கையை கைவிடலாம். விளக்கம் திருப்தி இல்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட தேதிக்குள் விளக்கம் அளிக்க தவறினாலோ, ஊராட்சி தலைவரை பதவியிலிருந்து நீக்குவது குறித்து கிராம ஊராட்சியின் கருத்தினை பெற

சம்மந்தப்பட்ட தாசில்தாரை, மாவட்ட ஆட்சியர் கோருவார்.
உட்பிரிவு 3 ன்படி தாசில்தார் அந்த அறிவிப்பையும், விளக்கத்தையும், கிராம ஊராட்சித் தலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான கருத்துருவையும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் தாம் நிர்ணயித்த நேரத்தில் கிராம ஊராட்சியின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

உட்பிரிவு 4 ன்படி தாசில்தார் இதற்கென கூட்ட அறிவிப்பை தலைவருக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்ட தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக சேர்ப்பிக்க வேண்டும்.

உட்பிரிவு 5 ன்படி இந்த கூட்டத்திற்கு தாசில்தாரை தவிர வேறு யாரும் தலைமை வகிக்கக்கூடாது. தாசில்தார் கூட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்குள் வரவில்லை என்றால் வேறு ஒரு தேதிக்கு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்.
உட்பிரிவு 6 ன்படி தாசில்தார் வேறு காரணங்களுக்காக கூட்டத்திற்கு தலைமை வகிக்க வரவில்லை என்றால் அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக பதிவு செய்து வேறு ஒரு தேதியில் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். அடுத்த கூட்டம் 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். அக்கூட்டத்திற்கான அறிவிப்பையும் 7 முழு நாட்களுக்கு முன் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்.

Also Read  சம்பளமில்லாத பதவிக்கு ஊராட்சி தலைவர்கள் போட்டியிடுவது ஏன்?

உட்பிரிவு 7 ன்படி மேலே கூறப்பட்டுள்ள உட்பிரிவுகளான 5 மற்றும் 6 ல் கூறப்பட்டுள்ள காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக கூட்டத்தை தள்ளி வைக்கக்கூடாது.

உட்பிரிவு 8 ன்படி தாசில்தார் தலைமையிலான கூட்டம் துவங்கிய உடன் பதவி நீக்கம் குறித்த முடிவுகளை கூட்டத்தில் பரிசீலனை செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய அறிவிப்பையும், கிராம ஊராட்சித் தலைவர் விளக்கம் கொடுத்திருந்தால் அதனையும் தாசில்தார் படித்து காட்ட வேண்டும்.

உட்பிரிவு 9 ன்படி தாசில்தார் கூட்டத்தில் எந்தவிதமான விவாதமும் செய்யக்கூடாது.

உட்பிரிவு 10 ன்படி மாவட்ட ஆட்சியர் அனுப்பிய யோசனையை ஏற்றுக் கொண்டாலோ அல்லது நிராகரித்தாலோ கிராம ஊராட்சி செய்த முடிவைக் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பில் பதிவு செய்து கொண்டு அந்த நடவடிக்கை குறிப்பின் நகலை கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தார் அனுப்பி வைக்க வேண்டும்.

உட்பிரிவு 11 ன்படி மாவட்ட ஆட்சியர், ஊராட்சியின் கருத்தினை பரிசீலனை செய்த பிறகு அவருடைய உளத்தேர்வின்படி அறிவிக்கை வாயிலாக ஊராட்சித் தலைவரை பதவியிலிருந்து நீக்கவோ அல்லது மேல் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவோ செய்யலாம். பதவியிலிருந்து நீக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தால் தமிழ்நாடு அரசிதழில் பதவி நீக்க அறிவிப்பு செய்ய வேண்டும். அந்த நாளிலிருந்து பதவி நீக்கம் அமலுக்கு வரும்.

Also Read  ஓராண்டில் ஊராட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு எப்படி?

உட்பிரிவு 12 ன்படி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யும் அல்லது நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

உட்பிரிவு 13 ன்படி மாவட்ட ஆட்சியருடைய அறிவிக்கை வெளியான தேதி அல்லது மேல்முறையீட்டின் மீது இறுதி ஆணை வெளியிடப்பட்ட தேதி, இந்தத் தேதிகளிலிருந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தலைவர் மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட தகுதியில்லை.