MGNREGS பணிகளில் வேலை உத்தரவை ஊராட்சி செயலர் பெயரில் வழங்குவதை கைவிடுக-தமிழக அரசுக்கு கோரிக்கை

ஜான்போஸ்கோ பிரகாஷ்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது.

ஊரகவளர்ச்சித்துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல்,கழிவுநீர் வாய்க்கால் கட்டுதல்,சாலைகள் அமைத்தல்,தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.MGNREGS திட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரரை வைத்து பணி மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை.

எனவே கோடிக்கணக்கான மதிப்புடைய பணிகளை மேற்கொள்ள ஊராட்சி செயலர்கள் பெயரில் துறைரீதியிலான வேலை உத்தரவுகள் வழங்கப்படுகிறது.மிக குறைந்த ஊதியம் பெறும் ஊராட்சி செயலர்கள் இப்பணியை மேற்கொள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுவது சாத்தியமற்றது.

மேலும் அப்படி வேலை உத்தரவு வழங்கப்படும் நேர்வில் வட்டார அளவிலான சில அழுத்தம் காரணமாக ஊராட்சி செயலர் பெயரிலேயே தொகை விடுவிக்கப்பட்டு சில உள்ளூர் அரசியல் பிரமுகர்களால் கைகாட்டப்படும் ஒருவரால் பணி மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது..

இப்படி வரும் அழுத்தங்களால் பணி மேற்கொள்ளப்படும் சூழலில் ஊராட்சி தலைவர்களுக்கும் ஊராட்சி செயலருக்கும் மனக்கசப்பு ஏற்படும் நிலையும் உள்ளது..

கடந்த 05 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி நடந்துவரும் சூழலில் ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளில் தவறு ஏற்படும் போது ஊராட்சி செயலர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Also Read  கடலூர் சம்பவம்- ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

எனவே மாண்புமிகு முதல்வர் அவர்களும்,மாண்புமிகு ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களும் கடந்த 05 ஆண்டுகளாக உள்ள இப்பிரச்சனையில் தலையிட்டு MGNREGS திட்டத்தின்கீழ் ஊராட்சி செயலருக்கு வேலை உத்தரவு வழங்கும் நடைமுறையை கைவிட்டு,கிராம ஊராட்சி மன்ற செயல்அலுவலர்களான ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயரில் வேலை உத்தரவுகளை வழங்கி பணியாளர் வாழ்வாதாரம் காத்து உதவிட வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்