பெண்ணின் படிப்புக்கு உதவிய பஞ்சாயத்து

இன்றைய காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வியறிவே, பாதுகாப்பாக இருக்கிறது. அதன்மூலம் அவர்கள் வாழ்வில் உயர்வதுடன், தங்களது குடும்பத்தையும் உயர்த்துகின்றனர். எதிர்காலத்துக்கான திட்டங்களையும் வகுக்கின்றனர். இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், தாம் படிப்பதற்காக கட்டிய கணவனையே பிரித்து வைக்கும்படி பஞ்சாயத்தாரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பஞ்சாயத்து கொடுத்த தீர்ப்பு பலரையும் வியக்கவைத்திருக்கிறது.

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவருக்கும் ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரிக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. 12ம் வகுப்புப் படித்த நேகாவுக்கு, அவரது பெற்றோர் திருமணத்தை நடத்திவைத்துள்ளனர். ஆனால் நேகாவுக்கோ படிப்பைத் தொடர ஆசை. இதற்கு அவரது கணவனும் புகுந்த வீட்டு பெரியோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி பாட்னாவுக்கு சென்றுவிட்டார், நேகா.

இந்த விவரம் தெரியாத நேகாவின் தந்தை குருதேவ், தன் மகளை யாரோ கடத்தி விட்டனர் என்று அஞ்சி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுவும் மணப்பெண் நேகாவுக்கு தெரியவர, அவர் கங்கானியா பஞ்சாயத்து தலைவர் தாமோதர் சவுத்ரியை சந்தித்து முறையிட்டார். இதனையடுத்து மணமகன், மணமகள் இருவீட்டாரையும் பஞ்சாயத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பஞ்சாயத்தில் நேகா, “நான் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் இதை ஏற்க என் கணவர் மறுக்கிறார்.

Also Read  தலைசோலை ஊராட்சி - சேலம் மாவட்டம்

எனவே கணவரை பிரிய அனுமதி வேண்டும்” என்று சொல்ல பஞ்சாயத்தே பரபரப்பானது. பின்னர், பஞ்சாயத்தார் பெண்ணின் கோரிக்கையை ஏற்று, இருதரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதனையடுத்து பஞ்சாயத்து தலைவர்களே முடிவெடுத்து நேகா படிப்பைத் தொடர, கணவனைப் பிரியலாம் என்று தீர்ப்பு அளித்தனர். மேலும் நேகாவை இது தொடர்பாக இருதரப்பினரும் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் பஞ்சாயத்தார் எழுதி வாங்கிக்கொண்டனர். கிராமப் பஞ்சாயத்தினர் பெண்ணின் படிப்புக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பு, பலதரப்புகளிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.